ஆப்கான் விமான தளத்தை தன் வசப்படுத்த சீனா முயற்சி செய்கிறது - இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த நிக்கி ஹேலி
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பக்ராம் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை நன்கு உற்று நோக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி ஃபாக்ஸ் நியூஸிடம் இதை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது -
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அதன் முக்கிய நட்பு நாடுகளை அணுகி அந்த நாடுகளுக்கு தங்கள் ஆதரவு இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். உலகம் முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை அமெரிக்கா மேற்கொள்கிறது என்பதை அமெரிக்க அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
ஏனென்றால், தற்போது ஜிஹாதிகள் பெற்றுள்ள இந்த தார்மீக வெற்றியால், உலகெங்கிலும் ஜிகாதிகளின் பெரிய ஆட்சேர்ப்பு பிரச்சாரம் நடக்கும். இதை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து நமது இணைப்புகளை ஹேக் செய்ய முயற்சி எடுத்து வருகிறார்கள். சீனா மீதும் ஒரு கண் தேவை. ஏனெனில், பக்ராம் விமானப்படை தளத்தை தன் வசப்படுத்துவதில் சீனா உன்னிப்பாக உள்ளது. "சீனா ஆப்கானிஸ்தானில் சில இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, பாகிஸ்தானையும் பயன்படுத்தி, இந்தியாவிற்கு எதிராக வலிமை பெற முயற்சிக்கிறது.
இந்த பகுதிகளில் இன்னும் அதிக பிரச்சனைகள் உருவாக உள்ளது. நமது கூட்டாளி நாடுகள் மற்றும் நமது நட்பு நாடுகளை நாம் பாதுகாக்க வேண்டும். நமது ராணுவத்தை நவீனப்படுத்துவது, மற்றும் சைபர் குற்றங்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்கு எதிராக நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவது ஆகிய பணிகளில் நாம் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
