கண்மூடித்தனமான கொண்டாட்டம் நடத்திய தாலிபான்கள் - வெற்றிக் களிப்பின் உச்சியில் விபத்து!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டது. தாலிபான்களின் மகிழ்ச்சி தற்போது மேலோங்கி இருக்கிறது. இப்போது ஆப்கானிஸ்தான் முற்றிலும் தாலிபான் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது.
இதனால், தாலிபான்களை கையில் பிடிக்க முடியவில்லை. தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பயங்கரவாதிகள் சாலைகளில் ஊர்வலம் செல்கிறார்கள், வானில் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். ஆப்கானிஸ்தான் (Afghanistan) தலைநகர் காபூலில், தாலிபான்கள் திறந்த ஜீப்புகளில் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு ஊர்வலம் செல்வதைக் காண முடிந்தது. தங்கள் மகிழ்ச்சியை உலகுக்கு காட்டும் வகையில், தாலிபான் போராளிகள், பத்திரிகையாளர்களையும் தங்களுடன் இந்த ஊர்வலங்களில் அழைத்துச் செல்கின்றனர்.
எனினும், இப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தாலிபான் படைகளின் இரு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதால், அவர்களது மகிழ்ச்சி தடைபட்டது. தாலிபானின் (Taliban) பத்ரி 313 பட்டாலியனின் போராளிகள் நேற்று காபூல் விமான நிலையத்தில் காரில் பயணித்து கொண்டாடினார்கள். அப்போது, சில போராளிகள் இராணுவ சீருடையில் இருந்தார்கள். சிலர் சாதாரண உடைகள் அணிந்திருந்தார்கள்.
கார் வேகத்தை அதிகரித்தபோது, வெற்றியை கொண்டாடிய இரண்டு தாலிபான் போராளிகள், வாகனத்திலிருந்து கீழே விழுந்தனர். வாகனத்திலிருந்து கீழே விழுந்த தாலிபான் போராளிகள், வலியால் கத்தியதோடு நீண்ட நேரம் அப்படியே அமர்ந்தனர். அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. அதற்குப் பிறகு, அனைவரும் காரில் அமர்ந்து மீண்டும் புறப்பட்டனர்.
