"போர் முடிவு... புத்திசாலித்தனமான முடிவு" - மனம் திறந்து பேசிய அதிபர் பைடன்!
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போரை முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், இந்த போர் முடிவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புத்திசாலித்தனமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களிடையே ஜோ பைடன் பேசியதாவது -
ஆப்கானிஸ்தானில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்ற பிரச்னையைச் சந்திக்கும் 4 வது அமெரிக்க அதிபர் நான்தான்.
ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, டொனால்டு ட்ரம்ப் ஆகியோரை நினைவுகூர்கிறேன். இந்த பொறுப்பை 5-வது அதிபருக்கு அளிக்கப் போவதில்லை. நீண்ட காலமாக ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக நான் உறுதியளித்திருந்தேன். தற்போது அதை நிறைவேற்றியுள்ளேன்.
ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படைகள் முற்றிலும் வெளியேறி விட்டன. இந்த முடிவு சரியான மற்றும் புத்திசாலித்தனமான சிறந்த முடிவு. பயங்கரவாதத்துக்கோ, அமெரிக்கர்களுக்கு தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கோ அமெரிக்கா அடிபணியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
