ஆப்கானில் நிலவும் தட்டுப்பாடு - பணம் எடுப்பதற்காக வங்கிகள் முன்பு நெடுநேரமாக காத்திருக்கும் மக்கள்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, நாங்கள் மனம் மாறிவிட்டோம். இனி அடக்குமுறையைக் கையாள மாட்டோம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர். ஆனால், அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துளி கூட இல்லை. ஆப்கான் மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று விமான சக்கரங்களில் தொற்றிக்கொண்டும், கம்பி வேலியைத் தாண்டியும் அண்டை நாடுகளுக்கு தப்பியோடி வருகின்றனர்.
20 ஆண்டு கால போரை முடித்துக் கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி விட்டது. காபூலிலிருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறி விட்டாலும் திட்டமிட்டப்படி அனைவரையும் வெளியேற்ற முடியவில்லை என்று பெண்டகன் கூறியுள்ளது. ஆப்கான்ஸ்தானை தாலிபான் கைபற்றியதிலிருந்து, தினமும் பல விதமான அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பணம் எடுப்பதற்காக வங்கிகள் முன்பு நீண்ட நேரம் ஏராளமான மக்கள் காத்திருக்கும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வங்கிகளிலும் 200 டாலருக்கு மேல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏராளமான மக்கள் வங்கிகள் முன்பு காத்துக்கொண்டிருக்கின்றனர். எனினும் பணம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் காத்திருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
