ஆப்கானை விட்டு வெளியேறிய அமெரிக்க படைகள் : வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் கொண்டாட்டம்!
ஆப்கான்ஸ்தானை தாலிபான் கைபற்றியதிலிருந்து, தினமும் பல விதமான அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை, ஷரியத் சட்டம் தான் என தெளிவாக தாலிபான் அறிவித்து விட்டது. மேலும், தாலிபான்கள் பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என தடை விதித்துள்ளனர். அதோடு, பெண்கள் கை விரல்களில் நெயில் பாலிஷ் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், 20 ஆண்டு கால போரை முடித்துக் கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி விட்டது. காபூலிலிருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறி விட்டாலும் திட்டமிட்டப்படி அனைவரையும் வெளியேற்ற முடியவில்லை என்று பெண்டகன் கூறியிருக்கிறது.
தாலிபான்கள் மேலும் 10 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால், வெளிநாட்டு படைகளுக்கு உதவியோடு அனைவரையும் பாதுகாப்பாக கொண்டு சென்றிருக்க முடியும் என்று அமெரிக்கா ராணுவம் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து, அமெரிக்காவின் கடைசி ராணுவ விமானம் காபூலிலிருந்து புறப்பட்டுச் சென்றதை தாலிபான்களும் உறுதி செய்துள்ளனர்
. இதனை கொண்டாடும் வகையில் நள்ளிரவு நேரத்திலும் வானை நோக்கி சராமரியாக துப்பாக்கியால் சுட்டு அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துள்ளனர். ஆகஸ்ட் 14ம் தேதி முதல் நேற்று இரவு வரை 1.22 லட்சத்திற்கும் மேற்பட்டோரை அமெரிக்கா ஆப்கனிலிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்.
ஆப்கனை விட்டு புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கூட காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தாக்குதல் மூலம் அமெரிக்கா பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
