40 லட்சம் ஆப்கான் சிறுவர்கள் பள்ளியிலிருந்து நிறுத்தம் – யுனிசெஃப் வேதனை!

world-viral-news
By Nandhini Aug 30, 2021 09:53 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, நாங்கள் மனம் மாறிவிட்டோம். இனி அடக்குமுறையைக் கையாள மாட்டோம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.

ஆனால், அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துளி கூட இல்லை. ஆப்கான் மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று விமான சக்கரங்களில் தொற்றிக்கொண்டும், கம்பி வேலியைத் தாண்டியும் அண்டை நாடுகளுக்கு தப்பியோடி வருகின்றனர். ஆனால் அதற்கும் நாளையிலிருந்து தலிபான்கள் தடை விதிக்க இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையால் பெரியவர்களே அல்லாடி கொண்டிருக்கும் வேளையில் சிறுவர், சிறுமியர்களின் நிலை தான் மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.

அவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்று ஐ.நா. சபை வருத்தம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் நிதியமான யுனிசெஃப் ஆப்கானிஸ்தான் சிறுவர்களின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் குறைந்தது 1 கோடி குழந்தைகளாவது மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்குக் காத்திருப்பதாக யுனிசெஃப் அண்மையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யுனிசெஃப் அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவர் ஆப்கானிஸ்தான் முழுவதும் ஆய்வுசெய்ய சென்றார். ஆய்வை முடித்து திரும்பிய அவர் குழந்தைகளின் நிலைமை குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டு போரால் வறட்சி ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய மோதலும் பாதுகாப்பின்மையும் வறட்சியை மேலும் அதிகரித்துள்ளது. விலைவாசி தாறுமாறாக ஏறியுள்ளது. ஏழை மக்கள் அன்றாட வாழ்வை கழிப்பதே பெரும்பாடாக உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கிடைப்பது இல்லை. பாதுகாப்பு நெருக்கடி, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, கடுமையான வறட்சி, கொரோனா பரவல், எதிர்வரும் கடுமையான குளிர்காலம் என குழந்தைகள் முன்னெப்போதையும் விட அதிக ஆபத்தில் இருக்கிறார்கள்.

குழந்தைகள் மிகுந்த அச்ச உணர்வுடன் உள்ளனர். அவர்களுக்கு மன ரீதியான ஆதரவு தேவைப்படுகிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சுகாதார உதவிகளும் கிடைக்காமல் போவதால் டெங்கு, போலியோ உள்ளிட்ட நோய்களால் தாக்கப்படும் ஆபத்து உள்ளது.

40 லட்சம் சிறுவர்கள் கட்டாயப்படுத்தி பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் சிறுவர்களின் நலனுக்காக நிதி அனுப்பும் அமைப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. உலக நாடுகள் ஒருபோதும் ஆப்கானிஸ்தான் சிறுவர்களைக் கைவிடக் கூடாது” என்றார்.

40 லட்சம் ஆப்கான் சிறுவர்கள் பள்ளியிலிருந்து நிறுத்தம் – யுனிசெஃப் வேதனை! | World Viral News