இத்தாலியில் 20 அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - விண்ணை முட்டிய புகை - பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
இத்தாலி நாட்டின் மிலன் நகரில் 20 அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 15-வது மாடியில் ஏற்பட்ட தீ சற்று நேரத்தில் மளமளவென்று மற்ற மாடிகளுக்கும் பரவிவிட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தார்கள். ஆனாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால், அடுக்குமாடி கட்டிடத்திற்குள் சென்று மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 20க்கு மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள். வேறு யாரேனும் சிக்கிக் கொண்டார்களா அல்லது உயிரிழந்துள்ளனரா என்ற இன்னும் வெளியாகவில்லை.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அடுக்குமாடி கட்டிடத்தில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டபோது விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியேறியது. இந்த இருபது மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
