டீ அருந்திக்கொண்டே நாட்டுப்புற பாடகர் நெற்றிபொட்டில் சுட்டுத்தள்ளிய தலிபான்கள்
தலிபான்கள் இஸ்லாமியத்தின் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் நவீன உலக மாறுபாடுகளுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளவே ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு தெரிந்தவை எல்லாம் இஸ்லாமிய ஷரியத் சட்டம் தான்.
அவர்களுக்கு அது தான் வேதம், சட்டம். அதன்படி தான் ஆப்கானிஸ்தானில் 1996 - 2001 காலகட்டத்தில் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களது ஆட்சி பெண்களுக்கு இருண்ட காலமாகவே இருந்து வந்தது. அங்குள்ள ஆண்களுக்கும் அரைகுறை சுதந்திரம் தான். தாடி வைத்துக்கொள்ள வேண்டும்.
உடை அணிவதில் கட்டுப்பாடு, இசையை கேட்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை இசை என்பது ஹராம் (அனுமதிக்கப்படாத செயல்). அதை இசைக்கவோ, கேட்கவோ அனுமதி கிடையாது.
இதெல்லாம் அவர்கள் ஆட்சியில் இருந்ததுதான். அதற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் கொஞ்சமாக ஜனநாயகம் தலையை காட்டியது. இசை கேட்பது, இசைப்பது இயல்பாக நிகழ்ந்தது.
ஆனால் தற்போது மீண்டும் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறார்கள். ஷரியத் சட்டப்படியே ஆட்சி நடைபெறும் என்றும் சொல்லிவிட்டார்கள். இதனால் மீண்டும் ஒரு இருண்ட நரகத்துக்குள் ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறது.
மக்களை மகிழ்விக்கும் இசைக்கும் தடை; மீறியவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என பல்வேறு மாகாணங்களில் அறிவிப்பு வெளியிட்டார்கள். அதனை மீறி பாடிய பிரபல நாட்டுப்புற கலைஞரான ஃபவாத் அந்தராபியை அவரது வீட்டின் முன்பே கொடூரமாக சுட்டுக்கொன்றார்கள். இச்சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடந்த சம்பவம் குறித்து அவரது மகன் கூறுகையில், “என் தந்தையைத் தேடி அடிக்கடி தலிபான்கள் வருவார்கள். அதுபோல தான் வந்தார்கள் என்று நான் நினைத்திருந்தேன்.
என் தந்தையோடு தேநீர் எல்லாம் அருந்தினார்கள். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்” என்றார். ஃபவாத் அந்தராபி பக்லான் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர்.
இவர் ஆப்கானிஸ்தனையும், ஆப்கானியர்களையும் புகழ்ந்து பல்வேறு பாடல்களைப் பாடினார். பிராந்திய மொழிகளுக்கேற்ப பாடுவதில் திறமையானவர். இதனால் இவரின் பெயர் கொடிகட்டி பறந்தது. ஆப்கானியர்கள் அனைவருக்கும் இவரைப் பிடித்திருந்தது. ஆனால், தலிபான்களுக்கு இவரை பிடிக்கவில்லை. அதனால் தான் இவரை சுட்டுக்கொன்று விட்டனர்.
