காபூல் விமான நிலையத்திற்கு தலிபான்கள் சீல் - தாக்குதல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது - அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு தலிபான்கள் சீல் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு மக்கள் பெரும் பீதி அடைந்து பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகிறார்கள்.
பெரும்பாலானவர்கள் காபூல் விமான நிலையம் வழியாக தப்பிச்செல்லும் நிலையில் அவ்விமான நிலையத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை தலிபான்கள் தொடங்கியிருக்கிறார்கள். எனினும், நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை சுற்றி ஏராளமான மக்கள் முகாமிட்டு தங்கி இருக்கிறார்கள்.
இன்னொரு புறம் தரை வழியாக ஏராளமான ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையே, காபூல் விமான நிலையத்தில் வெகு விரைவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க மிக அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருக்கிறார்.
காபூல் விமான நிலைய பகுதியில் அமெரிக்கர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காபூல் விமான நிலையம் அருகே ஐஎஸ்ஐஎஸ் கோராசான் பிரிவு பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை அன்று நடத்திய தாக்குதலில் 169 ஆப்கானிய மக்களும், 13 அமெரிக்க படை வீரர்களும் உடல் சிதறி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
