ஆப்கன் - பாகிஸ்தான் வர்த்தகம் 50 சதவீதம் அதிகரிப்பு - வெளியான ரிப்போர்ட்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆட்சி மாற்றத்தால், இந்தியா - ஆப்கானிஸ்தானிற்கு இடையிலான வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அதேசமயம், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம், கடந்த வாரத்தில் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்தில் பிரச்னைகள் இருந்த போதிலும், வர்த்தகம் அதிகரித்துள்ளதாக, பாகிஸ்தானின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இருந்தாலும், பாகிஸ்தானுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
இதனையடுத்து, பாகிஸ்தானின் வர்த்தகம், தொழில், மற்றும் முதலீட்டு துறையினர், கடந்த 23ம் தேதியன்று தலிபான்களை சந்தித்து, தனியார் நிறுவன பாதிப்புகள் குறித்து பேச்சுவார்த்தி நடத்தி இருக்கிறார்கள்.
பாகிஸ்தானை போலவே ஈரானும், ஆப்கானிஸ்தானுடனான எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி, தலிபான் கைப்பற்றலுக்கு பின் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து உலோகங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து உலக நாடுகளுக்கு அதிகளவில் உலோக தேவை இருந்த போதிலும், குறைவான விலையே வழங்குவதால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
