காபூல் குண்டுவெடிப்பு தாக்குதல் - உயிரிழந்தவர்களை கவுரவிக்க அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க அதிரடி உத்தரவு!
காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலை முன்னிட்டு வரும் 30ம் தேதி வரை அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் மீட்டெடுத்து வருகிறது. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களையும் மீட்கப்பட்டு வருகிறார்கள். காபூல் விமான நிலையத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக, காபூல் விமான நிலையம் ஆனது, அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 31ம் தேதிக்கு பின் காபூலில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு படைகள் முழுவதும் திரும்பப்பெறப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்.
இதனால், ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்து வருகிறார்கள். இந்நிலையில், காபூல் விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டன.
இத்தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள். மற்ற 60 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என தெரிவித்துள்ளார். அவர்களை பதிலுக்கு விலை கொடுக்க செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கவுரவிக்கும் வகையில், வருகிற 30ம் தேதி மாலை வரை அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது.
