காபூல் விமான நிலையம் அருகே இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 73 பேர் பரிதாப பலி!
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 73 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இதனையடுத்து, வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். மீட்பு பணிகள் தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக, காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றன.
ஆகஸ்டு 31ம் தேதியோடு மீட்பு பணிகள் நிறைவடையும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகிறார்கள்.
இதனிடையே, காபூல் விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் அங்கு இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தாக்குதலில் 13 அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 73 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.
