தலிபான்கள் எங்கள் உயிரை பாதுகாத்தனர்... உணவு, தண்ணீர் கொடுத்தனர்- ஆப்கானிலிருந்து இந்தியா திரும்பிய ஆசிரியர் நெகிழ்ச்சி
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து நூற்றுக்கணக்கான இந்திய குடிமக்களில் தமல் பட்டாச்சார்யாவும் ஒருவராவார்.
இவர், மேற்கு வங்கத்தில், நிம்தாவில் வசித்து வருகிறார். தமல் காபூலில் உள்ள கர்தான் சர்வதேச பள்ளியில் ஆசிரியராக 5 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். காபூலை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு ஒரு நாள் முன்பு தமலும், மற்றுமொரு இந்திய பணியாளரும் பள்ளியிலிருந்து விலகினார்கள்.
பல போராட்டங்களுக்கு பின்னர் தமல் பட்டாச்சார்யா இறுதியாக ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் மீண்டும் இந்தியாவில் இணைந்தார்.
தன்னுடைய ஆப்கானிஸ்தான் அனுபவங்களை தமல் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் பேசியதாவது -
"தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய செய்திகள் எங்களுக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. தலிபான்கள் ஆகஸ்ட் 15ம் தேதி ஆப்கானை கைப்பற்றுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், அதற்கு முன்பே கைப்பற்றிவிட்டனர்.
நானும், எனது இந்திய சக ஊழியரும் ஆகஸ்ட் 14ம் தேதியே வேலையை ராஜினாமா செய்து விட்டோம். இதனையடுத்து, ஆகஸ்ட் 17ம் தேதி அன்று இந்தியா திரும்ப நினைத்தோம்.
ஆனால், எங்கள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுவிட்டது. தலிபான்கள் எங்களை என்ன செய்ய போகிறார்களோ, வெளிநாட்டினரிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்ள போகிறார்களோ என்று நாங்கள் ரொம்ப பயந்து போனோம். ஆனால் தலிபான்கள் பொறுப்பேற்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு நிலைமை சற்று சீரானது. அவர்கள் சட்டம் ஒழுங்கை மீட்டனர். ஆனால் அது எப்போதும் ஒரு பதற்றமான தருணம்.
நாங்கள் கொல்லப்படுவோம் அல்லது கடத்தப்படுவோம் என்று நாங்கள் பயந்து போய் இருந்தோம். "தலிபான் அதிகாரிகளுக்கும், எங்கள் பள்ளி அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு சுற்று சந்திப்புகளுக்குப் பிறகு, எங்களுக்கு எதுவும் அசம்பாவிதம் நடக்காது என்பதை அறிந்து நாங்கள் அமைதியாக இருந்தோம்.
தலிபான்கள் எங்களை தினம் தினம் பாதுகாத்தார்கள். அவர்கள் எங்களுக்கு உணவு கொடுத்தார்கள். தண்ணீர், மருந்துகள் கொடுத்து அவர்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள்.
இந்திய அரசு, வெளிவிவகார அமைச்சகம் (MEA) மற்றும் இந்திய விமானப்படை (IAF) ஆகியோருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அவர்களின் உதவியால்தான் நாங்கள் இந்தியாவிற்கு வந்தோம் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
