“படைகளை பின்வாங்கிய முடிவு சரியா, தவறா என வரலாறு நிச்சயம் சொல்லும்” – ஜோ பைடன் விளக்கம்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் சர்வாதிகார நிழல் படர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானை ஆட்டிப்படைக்கும் தலைமைப் பொறுப்புக்கு தாலிபான்கள் வந்துள்ளனர்.
அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் அரசப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையேயான போர் ஏதோ இன்று முடிவடைந்தது கிடையாது. அது கடந்த ஆண்டு தோஹாவில் இரு தரப்புக்கும் இடையேயான கையெழுத்து ஒப்பந்தமானதிலிருந்து முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க படைகள் தங்களை விட்டால் போதும் என்ற நிலையில் தான் வேக வேகமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது.
டிரம்ப் ஆட்சியில் கையெழுத்தான தோஹா அமைதி ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா படிபடியாக தங்களது படைகளைப் பின்வாங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல தலிபான்கள் இரட்டை கோபுர தாக்குதலுக்குக் காரணமான ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத குழுக்களை அனுமதிக்கக்கூடாது.
இந்த ஒப்பந்தத்தின்படியே அமெரிக்கா தனது படையைப் பின்வாங்கி இருக்கிறது. ஒபாமா காலத்திலிருந்தே படைகள் குறைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, ஒப்பந்தத்தை மீறாமல் பைடன் இம்மாத இறுதிக்குள் மொத்த வீரர்களையும் வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். எப்படியும் 1 மாதம் கழித்துதான் காபூலை தலிபான்கள் கைப்பற்றுவார்கள் என அமெரிக்க உளவுத்துறை கணக்கு போட்டிருந்தது.
ஆனால், அவர்கள் நினைத்ததை விட மிக வேகமாக காரியத்தை துல்லியமாக முடித்துள்ளனர் தலிபான்கள். தப்புக்கணக்கு போட்டதை உணர்ந்த அமெரிக்கா அவசர அவசரமாக தூதரக அதிகாரிகளையும் அமெரிக்கர்களையும் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் மீட்டது. பைடனின் இந்த முடிவுக்கு உலக அரங்கில் பல்வேறு விமர்சனங்களை எழுந்து வருகிறது.
தலிபான்களுடனான போருக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், பைடன் எடுத்த முடிவு தவறானது என்றும், இதனால் பெரிய விளைவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது, தன் மீதான விமர்சனங்களுக்கு பைடன் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார்.
தற்போது வெள்ளை மாளிகையில் பைடன் பேசுகையில், “ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய முடிவை வரலாறு சரியான முடிவு என்று பதிவு செய்யும். அங்கு அமைதி திரும்ப வேண்டுமென்றால், அது தலிபான்களின் கையில்தான் உள்ளது.
அந்நாட்டு மக்களின் நலனுக்காக நிலையான ஆட்சியைக் கொடுப்பார்களா என்று உறுதி கூற வேண்டும். பல்வேறு நாடுகளுடன் ராஜாங்க ரீதியான உறவுகளை தலிபான்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு அவர்கள் சொன்னதுபோல் நடந்துகொள்ள வேண்டும்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
