'துப்பாக்கிகளை ஏந்தி தாலிபான்களை எதிர்த்து களத்தில் நிற்பேன்' - மிரட்டிய ஆப்கானின் முதல் பெண் கவர்னர்
'சில நேரங்களில் நான் கவர்னர் அலுவலகத்தில் இருப்பேன். மற்ற நேரங்களில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போரில் இருப்பேன்'' என்று கூறிய ஆப்கானின் கவர்னர் சலீமா மஜாரி, தலிபான்களுக்கு எதிரான போரில் ஆப்கான் ராணுவமே பின்வாங்கியபோது எதிர்த்து நின்றார். அவர் இப்போது தலிபான்களால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இதை உறுதி செய்யும் விதமாக அந்நாட்டு பத்திரிகையாளர் நதியா தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஆப்கானிஸ்தானின் முதல் பெண் கவர்னர் சலீமா மஜாரி தலிபான்களால் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
சலீமா மஜாரி 1980ம் ஆண்டு ஈரானில் பிறந்தார். சுமார் 30,000க்கும் அதிமான மக்கள் வசிக்கும் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சர்கின்ட் மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பெண் கவர்னராக பதவியேற்றார். 40 வயதாகும் கவர்னராக மட்டும் கிடையாது.
கடந்த 2019ம் ஆண்டு தலிபான் எதிர்ப்பு போராளிகளுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். தலிபானுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டனர்.
ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே சலீமாவின் மாவட்டத்தை பெருமளவில் தலிபான்கள் கைப்பற்றினார்கள். அவர் மாவட்டத்தில் பாதுகாப்பை அதிகரிக்க 600 உள்ளூர் வாசிகளை நியமித்தார். நியமிக்கப்பட்ட 600 பேரும் ராணுவ வீரர்கள் கிடையாது. சாதாரண விவசாயிகள் தான்.
அவர்கள் அனைவரும் தங்கள் கால்நடைகளை விற்று ஆயுதங்களை வாங்கி தலிபான்களுக்கு எதிராக களத்தில் நின்றார்கள். ஆப்கானிஸ்தான் முழுவதும் அடிபணிந்தபோதும், இறுதிவரை போராடியது என்னமோ சலீமாவின் மாவட்டம் தான். அத்தகைய போர் குணம் படைத்த சலீமா இன்று தாலிபானின் தடுப்புக்காவலில் உள்ளார்.
