‘என்னது ஜனநாயக ஆட்சியா... அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது...’ – தலிபான்கள் திட்டவட்டம்! அச்சத்தில் மக்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல்வேறு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் ஆப்கானிஸ்தான் மக்களை ஆட்டிப் படைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு பயங்கரமான ஆட்சி செய்தவர்கள் தலிபான்கள்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அரைகுறை ஜனநாயகத்துடன் மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். மீண்டும் இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி தான் கொடுங்கோல் ஆட்சி நடைபெறுமா என்ற அச்சமும் மக்களை அஞ்ச வைத்துள்ளது. இதற்கு தலிபான் தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
தலிபான் அமைப்பின் நிர்வாகி வஹீதுல்லாஹ் ஹஷிமி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ரீதியான ஆட்சிக்கு இடம் கிடையவே கிடையாது. எங்களுக்கு ஷரியத் சட்டம் உள்ளது. அதுபோதும். அதன்படி தான் ஆட்சி நடைபெறும். ஜனநாயக முறைக்கான எந்த அடிப்படைக் கட்டமைப்பும் இங்கு இடம் கிடையாது.
1996-2001ஆம் ஆண்டு வரை முல்லா ஓமர் தலைமையில் எப்படி ஆட்சி நடந்ததோ அதேபோன்றதொரு ஆட்சி தான் இந்த முறையும் நடக்கும். அதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஷரியத் சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும். சுகாதாரத்துறையில் பெண்கள் பணியாற்றலாம், கல்வி கற்கலாம் என்றார்.
இவர் சொல்வது போல ஷரியத் சட்டம் ஆட்சி செய்தால் நிச்சயம் ஆப்கானிஸ்தான் இன்னொரு நரகத்துக்குள் நுழையத்தான் ஆக வேண்டும். ஆப்கானிஸ்தானில் இவர்கள் ஆண்ட (1996-2001) காலக்கட்டத்தில் அந்நாட்டுப் பெண்கள் அனுபவித்த கொடுமைகளை சொல்லவே முடியாது.
பெண்கள் தலை முதல் கால் பாதம் வரை தங்களது ஆடைகளால் மறைக்க வேண்டும். ஆண் துணையில்லாமல் எங்கேயும் செல்ல முடியாது. சிறுமிகள் பாடசாலை செல்லக் கூடாது.
மிக மிக முக்கியமாக அவர்கள் வீட்டு வேலை மட்டும் தான் செய்ய வேண்டும். சிறுமிகள் முதல் கைம்பெண்கள் வரை போகப் பொருளாகவே பார்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
