ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபரை திடீரென சந்தித்த தலிபான்கள்! அடுத்த நடவடிக்கை என்ன?
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பூமியில் ரத்தக்களறி நடக்கக் கூடாது என்பதற்காகவே தான் ராஜினாமா செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, புதிய அரசை அமைக்க தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை சந்தித்து பேசினார்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான் அமைப்பின் முக்கிய பிரிவாக ஹக்கானி பயங்கரவாத குழு உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தலிபான்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
