“எங்களை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம்... உங்கள் அனைவரையும் நாங்கள் மன்னித்து விட்டோம் – தலிபான்கள்!
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆட்சி கைமாறியவுடன் அதிகார மட்டத்திலும் அதிரடி மாற்றங்களை தலிபான்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி விமானத்தில் தப்பிச் சென்று விட்டார்.
இதனால், அச்சமடைந்த ஆப்கானிஸ்தானியர்களோ போக இடமில்லாமலும், நரகத்துக்குள் நுழைவதற்கு மனம் இல்லாமல் வாழ தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். விமானத்தின் சக்கரத்தில் மீது ஏறி தப்பித்து விடவேண்டும் என்ற மக்களின் அச்ச மனநிலை பார்க்கும்போதே நாம் யூகித்துக் கொள்ள முடிகிறது.
அத்தகைய கொடூர ஆட்சியை 1996 - 2001 காலக் கட்டங்களில் தாலிபான்கள் அரங்கேற்றியிருக்கிறார்கள். இதனால், பெண்கள் வீட்டிலேயே தான் முடங்கி இருப்பார்கள். ஆண்களுக்குக் கூட அங்கே சுதந்திரமாக நடமாட முடியாது. பெண்களுடைய நிலைமை எப்படியிருக்கும் என்பதே சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
20 ஆண்டு காலமாக தலிபான்களை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து கொண்டு வந்தார்கள். குறிப்பாக முந்தைய ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் அவர்களை எதிர்த்து கருத்துகளை முன்வைத்து வந்தனர். ஆனால் இன்றோ அவர்கள் அதிகாரத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் தலிபான்கள் என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் மூழ்கி இருக்கிறார்கள். வேலைக்குக் கூட வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இவர்களின் அச்சத்தைப் போக்க, தற்போது தலிபான்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள தலிபான்கள் அரசு ஊழியர்கள் தங்கள் மீது முழு நம்பிக்கையுடன் பணிக்கு வருகை தரலாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தலைநகர் காபூலை கைப்பற்றுவதற்கு முன்னர் காபூல் நுழைவு வாயிலில் நின்றுகொண்டு இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எங்களுக்கு யார் மீதும் வன்மம் கிடையாது. யாரையும் துன்புறுத்த விருப்ப மாட்டோம். அனைவரையும் மன்னித்து விடுகிறோம்; மரியாதையாக அனைவரும் சரணடைந்து விடுங்கள் என அப்போது கூறியிருந்தது கவனித்தக்கது.