அமீரகம் - ஆப்கன் இடையே விமான சேவைக்கு முற்றிலும் தடை - தேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிக்கை!
அமீரகம் - ஆப்கானிஸ்தான் இடையே விமான சேவை தடை செய்யப்பட்டிருப்பதாக தேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அமீரக தேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்துள்ளது. இதில் தற்போது தலைநகர் காபூலில் உள்ள முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு நாட்டின் போர் விமானங்கள் மற்றும் அரசு ஏற்பாடு செய்துள்ள மீட்பு விமானங்கள் சென்று வருகின்றன.
இதன் காரணமாக அங்குள்ள ஓடுபாதையில் தரையிறங்கவும், அங்கிருந்து விமானங்கள் புறப்படவும் சூழ்நிலை தகுந்ததாக இல்லை. மேலும், ஆப்கனில் தலிபான்கள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளனர். ஆட்சி மாற்றமும் நிகழ்ந்துள்ளது.
எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு அமீரகம்-ஆப்கானிஸ்தான் இடையே பயணிகள் விமான போக்குவரத்தானது தற்காலிகமாக தடை செய்யப்படுகிறது. இதேபோல அங்கு நிறுத்தப்பட்டுள்ள அமீரக விமானங்கள் தொடர்ந்து நிலைமை சீராகும் வரை அமீரகத்துக்கு வரவழைக்கப்படாது. மேலும் அமீரகத்தில் இருந்தும் காபூல் நகருக்கு எந்த விதமான பயணிகள் விமான போக்குவரத்தும் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.