‘ஐஸ்கிரீம் சாப்பிடப்போறேன்...’ நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட் மீது வழக்குப்பதிவு

world-viral-news
By Nandhini Aug 13, 2021 08:15 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை பைலட் தரையிறக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கனடாவின் Saskatchewan மாகாணத்தில் உள்ள டிஸ்டேல் நகர் உள்ளது. இந்த நகரின் மையப்பகுதியில் Dairy Queen என்னும் உணவகம் உள்ளது.

இந்த உணவகத்தின் வாசலில், கடந்த ஜுலை 31ம் தேதி மாலை 5 மணியளவில் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. அந்த மாகாணத்தின் மருத்துவ விமான ஆம்புலன்சின் அதே வண்ணம் இந்த ஹெலிகாப்டருக்கும் பூசப்பட்டிருந்தது.

இதனால், ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவசர மருத்துவ உதவிக்காக ஒருவேளை ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டிருக்குமோ என்று மக்கள் அனைவரும் நினைத்தனர். ஆனால், அந்த ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய பைலட், உணவகத்திற்கு சென்று ஐஸ் கிரீம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அந்த ஹெலிகாப்டர், அதிக போக்குவரத்து நிறைந்த பார்க்கிங் பகுதியில் தரையிறங்கியதால், அப்பகுதி முழுவதும் தூசு மற்றும் குப்பைகள் பரவியது. இது குறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இத்தகவலையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஹெலிகாப்டரை இயக்கிய 34 வயதான பைலட், ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதால் அதனை எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தரையிறக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பைலட் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் செப்டம்பர் 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

‘ஐஸ்கிரீம் சாப்பிடப்போறேன்...’ நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட் மீது வழக்குப்பதிவு | World Viral News