உலகமே மீண்டும் ஊரடங்கில் தள்ளப்படலாம்? காரணம் இந்த நாடு தான்
உருமாற்றம் காணும் கொரோனா பெருந்தொற்றுகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக பிரேசில் மாறி வருகிறது எனவும், இது உலகை மீண்டும் ஊரடங்கு நிலைக்கு தள்ளக்கூடும் என்று விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசில் தற்போது ஒரு திறந்தவெளி ஆய்வகமாக மாறியுள்ளது என்று எச்சரித்துள்ள நரம்பியல் விஞ்ஞானி மிகுவல் நிக்கோலெலிஸ், அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி இறுதியில் அதிக ஆபத்தான உருமாற்றங்களை உருவாக்க காரணமாக அமைந்துள்ளது என்றார்.
பிரேசில் நாட்டில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,840 என பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 259,402 என தெரிய வந்துள்ளது.
ஆனால் இறப்புகளின் எண்ணிக்கையை கண்டு யாரும் அச்சப்படத் தேவை இல்லை எனவும், அழுவதும் பலன் தராது எனவும் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தமது நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே நரம்பியல் விஞ்ஞானி மிகுவல் நிக்கோலெலிஸ், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு பிரேசில் ஏற்படுத்தும் அபாயங்கள் குறித்து உலக நாடுகள் கடுமையான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார். தற்போது கொரோனா வைரஸின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக பிரேசில் தொடரும் நிலையில், ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ தொற்றுநோய் உருமாற்றம் தொடர்பில் வகைப்படுத்துவதில் என்ன பயன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் தற்போது இங்கு பெருகிவரும் மட்டங்களில் பெருக அனுமதித்தால், புதிய பிறழ்வுகள் ஏற்படுவதற்கும் இன்னும் ஆபத்தான மாறுபாடுகளின் தோற்றத்திற்கும் நீங்கள் வாய்ப்பளிக்கின்றீர்கள் எனவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மிகவும் ஆபத்தான பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா உருமாற்றம் கண்ட புதிய தொற்றானது நாடு முழுவதும் பரவாமல் தடுக்க இங்கிலாந்து கடுமையான தனிமைப்படுத்தல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.