ஆப்கான் மசூதி நுழைவாயிலில் குண்டுவெடிப்பு - 12 பேர் பலி - அதிர்ச்சியில் உறையும் மக்கள்
ஆப்கானில் மசூதி நுழைவாயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள ஒரு மசூதியில் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாஹதின் தாயார் அவர்களுக்கு நேற்று முன்தினம் நினைவேந்தல் கூட்டம் ஒன்று நடந்தது.
அப்போது, மசூதியின் நுழைவாயிலில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
இருப்பினும் கடந்த சில வாரங்களாக தலிபான்களை குறிவைத்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றது. இச்சம்பவத்தையும் அவர்கள் தான் நடத்தி இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக மசூதியில் குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்துக்குப் பின்னர் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருக்கும் முக்கிய பகுதிகளில் தலிபான்கள் அதிரடியாக நுழைந்து அவர்களை வேட்டையாடியுள்ளனர். மேலும், கண்ணில் தென்பட்ட அனைத்து ஐ.எஸ் பயங்கரவாதிகளையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்துள்ளது. இதிலும் பலர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மசூதி குண்டு வெடிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தலீபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
