உலக வரலாற்றிலேயே முதன்முறையாக விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தி சாதித்த ரஷ்யக் குழு
உலக வரலாற்றில் முதன்முறையாக, ரஷ்யக் குழுவினர் விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பு நடத்தி முடித்துக் கொண்டு நேற்று பூமிக்கு திரும்பியுள்ளனர்.
ரஷ்ய நடிகை யுலியா பெரிசீல்டும் இயக்குநர் கிலிம் ஷிபெங்கோவும் சோயுஸ் எம்எஸ் - 19 விண்கலம் மூலம் கடந்த 5ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்கள்.
சேலஞ்ச் என்ற படத்தின், படப்பிடிப்பை விண்வெளியில் அவர்கள் நடத்தினார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே தங்கியிருந்த இருவரும் இப்படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தனர்.
விண்வெளி நிலையத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பூமியிலிருந்து ஒரு மருத்துவர் சென்று சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
12 நாள் படப்பிடிப்பிற்கு பின் இருவரும் பூமிக்கு திரும்பினார்கள். விண்கலத்திலிருந்து பிரிந்த பாராசூட்டில் அமர்ந்தவாறு இருவரும் கஜகஸ்தான் நாட்டில் தரையிறங்கினார்கள். விண்வெளித்துறையில் ரஷ்யாவின் மேலும் ஒரு சாதனையாக இது பார்க்கப்பட்டுள்ளது.
