இலங்கையில் ஒரு நாடு ; ஒரே சட்டம் அமல்படுத்த சிறப்பு குழு - தமிழர் ஒருவருக்குக் கூட இடமில்லை

world-srilanka
By Nandhini Oct 28, 2021 06:42 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இலங்கையில் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்தும் மசோதாவை தயாரிக்க, சர்ச்சைக்குரிய புத்த துறவி தலைமையில் 13 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்திருக்கிறார்.

அண்டை நாடான இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி 3 சர்ச்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் குண்டுகள் வெடித்தது. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இலங்கையில் செயல்படும் அமைப்பே காரணம் எனக் கூறப்பட்டது.

இதனையடுத்து, 'இலங்கையில் 'ஷரியத்' சட்டத்தை பின்பற்றுவதை தடை செய்ய வேண்டும். ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்நிலையில், இலங்கையில் 2019ல் நடந்த அதிபர் தேர்தலில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவோம்' என்று கோத்தபய ராஜபக்சேவும் அவரது எஸ்.எல்.பி.பி. எனப்படும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியும் வாக்குறுதி அளித்தன.

பெரும்பான்மையான புத்த மதத்தினரின் ஓட்டுகளை பெறும் நோக்கில் இந்த கோஷம் முன் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதிபராக கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். எஸ்.எல்.பி.பி. கட்சி ஆட்சியை பிடித்தது. பிரதமராக மகிந்தா ராஜபக்சே பதவியேற்றார்.

இந்நிலையில், ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்க 13 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்திருக்கிறார். இக்குழுவின் தலைவராக சர்ச்சைக்குரிய புத்தமத துறவி ஞானசரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கையில் 2013ம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஞானசராவின் பி.பி.எஸ். எனப்படும் 'போடு பால சேனா அமைப்பு' தான் முக்கிய பங்கு வகித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே அதிபர் அமைத்துள்ள 13 பேர் அடங்கிய சிறப்பு குழுவில் நான்கு முஸ்லிம் அறிஞர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் தமிழர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.