ஜேர்மனியில் முதன்முறையாக சாரதியில்லாமல் இயங்கும் ரயில் அறிமுகம்

By Fathima Oct 12, 2021 06:30 PM GMT
Report

உலகிலேயே முதன்முறையாக, சாரதியில்லாமல் தானே இயங்கும் பயணிகள் ரயில் ஒன்றை ஜேர்மனி அறிமுகம் செய்துள்ளது.

Hamburg நகரில் அறிமுகமாகும் இந்த ரயில், மிகச்சரியான நேரத்துக்கு வரும் என்றும், வழக்கமான ரயில்களைவிட குறைவான எரிபொருள் செலவில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு இத்தகைய தானியங்கி ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அவை டிசம்பர் மாதம் முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் இயங்கும் இந்த ரயில், முழுமையான ஒரு தானியங்கி ரயிலாகும். ஆனால், இது தானியங்கி ரயில் ஆனாலும், பயணத்தை மேற்பார்வையிட ரயிலில் ஒரு சாரதி இருக்கத்தான் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் முதலான நகரங்களில் சாரதி இல்லாமல் இயங்கும் ரயில்கள் ஏற்கனவே உள்ளன. அத்துடன், விமான நிலையங்களிலும் தானே இயங்கும் ரயில்கள் உள்ளன.

ஆனால், அந்த ரயில்கள், அவற்றிற்கென அமைக்கப்பட்ட தனிப் பாதையில் இயங்கும். இந்த ஜேர்மன் ரயிலோ, வழக்கமாக மற்ற ரயில்கள் பயணிக்கும் அதே பாதைகளில் இயங்கும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.