பில் கிளிண்டன் உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொரோனா இல்லாத தொற்றுநோய் பாதிப்பு காரணமாக கலிஃபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் பில் கிளிண்டன் சிகிச்சை பெற்று வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போது, அவரது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "இரண்டு நாள்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கின்றது. விரைவில் அவர் வீடு திரும்பிடுவார் என்று நம்பலாம்” என்றனர். தற்போது 75 வயதாகும் பில் கிளிண்டன், 2004 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் இதய சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
