பயணத் தடைகள் மூலம் ‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு

‘ஓமிக்ரான்’ கொரோனா வைரஸ் பரவல் பயணத் தடைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. அதே வேளையில், தென் ஆப்பிரிக்காவில் ‘ஓமிக்ரான்’ என்னும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ‘ஒமிக்ரான் வைரஸ்’ வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளும், வெளிநாடுகள் உடனான பயணத் தடை மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ‘ஓமிக்ரான்’ பரவலை பயணத் தடைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ''பயணத் தடைகள் மூலம் ஓமிக்ரானின் சர்வதேச பரவலைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. பயணத் தடைகள் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே ஏற்படுத்தும். எதிா்காலத்தில் நோய்த்தொற்றுகளை எதிா்த்துப் போராட சா்வதேச உடன்படிக்கை அவசியம். ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியாவசிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்திருக்கிறது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்