ஒமிக்ரான் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை - மருத்துவ கழகத்தின் தலைவர் ஏஞ்சிலிக் தகவல்
2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்று தென் ஆப்பிரிக்கா மருத்துவ கழகத்தின் தலைவர் ஏஞ்சிலிக் விளக்கம் கொடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது. இதன் வேகமும், வீரியமும் அதிகளவில் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இங்கிலாந்து, ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் , பிரேசில், வங்கதேசம் , சீனா, மொரீஷியஸ், சிங்கப்பூர், பெல்ஜியம், கனடா, ஜப்பான், அமெரிக்கா, சவுதி அரேபியா , ஆஸ்திரேலியா மற்றும் லெஸோதோ, மலாவி, நாமிபியா, மொசம்பிக்யூ, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா மருத்துவ கழகத்தின் தலைவர் ஏஞ்சிலிக் பேசியதாவது -
தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு குறைவாக இருப்பினும், அதன் வீரியம் குறித்து வரும் காலங்களில் தான் தெரியவரும். ஒமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சோர்வு, தலை வலி போன்ற அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது.
சுவை இழப்பு, வாசனை இன்மை காய்ச்சல் பற்றி யாரும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஒமிக்ரான் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே இருக்கும். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.