“முஸ்லிம் என்ற காரணத்தினால் நான் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன்... ” - பெண் எம்.பி. பரபரப்பு புகார்
இஸ்லாமியர் என்ற காரணத்தினால் நான் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் எம்.பி தெரிவித்துள்ள சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா முழு முடக்க காலத்தில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கேளிக்கை விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இதனால், போரிஸ் ஜான்சனின் பிரதமர் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, விசாரணை அறிக்கை இந்த வாரத்தில் வெளியாகும் என்றும், விசாரணை முடிவில் போரிஸ் ஜான்சன் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவர் பிரதமர் பதவியை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் எம்.பி ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு போரிஸ் ஜான்சனுக்கு மேலும் ஒரு பிரச்சினையை கிளப்பி உள்ளது.
போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்தவர் நுஸ்ரத் கானி. இவர் கடந்த 2020ம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தான் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தினால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதாக நுஸ்ரத் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். நுஸ்ரத் இது குறித்து, போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசி இருக்கிறார்.
இதனையடுத்து, நுஸ்ரத் இஸ்லாமியர் என்பதற்காக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரிக்க குழு ஒன்றை போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, அரசின் தலைமை கொறடாவான மார்க் ஸ்பென்சர், எம்.பி நுஸ்ரத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்திருக்கிறார். கன்சர்வேடிவ் கட்சி எந்தவிதமான இனவெறி அல்லது பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ளாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, அவை அவதூறானவை என்று நான் கருதுகிறேன் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.