காதலுக்காக அரச பட்டத்தை துறந்த இளவரசி - பல இன்னல்களுக்குப் பிறகு காதலனை மணந்தார்
கிழக்காசிய நாடான ஜப்பான் இளவரசி மகோ, சாதாரண குடிமகனான தன் காதலர் கெய் கொமுரோவை மணந்தார்.
இதனையடுத்து, காதலுக்காக அவர் தன் இளவரசி பட்டத்தை துறந்துள்ளார். ஜப்பான் மன்னர் நருஹிட்டோ. இவரது மருமகள் மகோ. இவர் டோக்கியோ சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.
அந்த பல்கலைக்கழகத்தில் இவருடன் படித்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கெய் கொமுரோ என்ற இளைஞரை காதலித்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள போவதாக 2017ல் இருவரும் அறிவித்தார்கள். . சாமானியரை திருமணம் செய்வதால் அரச குடும்பத்தை விட்டு வெளியேறி, இளவரசி பட்டத்தையும் துறக்க வேண்டிய நிலை மகோவுக்கு ஏற்பட்டது. அதற்கு அவர் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தார்.
இதற்கிடையே கொமுரோவின் தாய் மீது பண மோசடி புகார் சுமத்தப்பட்டது. இதனால் திருமணம் தடையானது. இதனையடுத்து, கெய் கொமுரோ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சட்டம் படிக்க சென்றார்.
படிப்பை முடித்து கடந்த மாதம் ஜப்பான் திரும்பினார். இந்நிலையில், சாதாரண மக்களைப் போல் திருமணம் செய்து கொள்ள காதலர்கள் இருவரும் முடிவெடுத்தனர். இவர்கள் திருமணம் நேற்று காலை டோக்கியோவில் நடைபெற்றது. அரண்மனையிலிருந்து நேற்று அதிகாலை மகோ வெளியேறினார்.
முன்னதாக அவர் தன் பெற்றோர், இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ மற்றும் தங்கை ககோ ஆகியோரை ஆரத்தழுவி உணர்ச்சி பொங்க பிரியாவிடை பெற்றார். அப்போது அவர் மிகவும் எளிமையான ஆடை அணிந்திருந்தார். வெளிர் நீல நிற ஆடையில் தந்தை, தாய், சகோதர, சகோதரிகளை ஆரத்தழுவி விடை பெற்றார். பின் எளிமையான முறையில், கொமுரோ - மகோ திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தின் வாயிலாக இளவரசி பட்டத்தை மகோ துறந்து விட்டார். 'அரச குடும்பத்தின் பெயரையும், தன் பெயருக்குப் பின்னால் அவர் பயன்படுத்த மாட்டார். அவரது கணவரின் குடும்பப் பெயரையே மகோ இனி பயன்படுத்துவார்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், சாமானியரை திருமணம் செய்து கொள்ளும் போது, 9 கோடி ரூபாய் சீதனமாக வழங்குவது வழக்கம். 'அந்த தொகை எனக்கு வேண்டாம்' என்று மகோ நிராகரித்திருக்கிறார். புதுமண தம்பதியர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கள் வாழ்க்கையை துவங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

