காதலர் தின ஸ்பெஷல் : காதல் புரட்சி சரித்திரம் படைத்த கடிதங்கள்

By Irumporai Feb 14, 2023 06:17 AM GMT
Report

மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு அங்கமாக ஒரு கருவியாக இருந்தவை எழுத்துக்கள் , அதிலும் குறிப்பாக கடிதங்கள் மனித வாழ்வில் பெரும் மைல்கல் என்றே கூறலாம்.

கரைந்துபோன கடிதங்கள்

இன்றைய 2k கிட்ஸ்களுக்கு கடிதங்கள் பற்றி கேட்டால் , ஒரு பேனாவும் , காகிதமும் பெரிதாக என்ன செய்யமுடியும் ? என்று கேலியாக சிரிக்கலாம் , ஆம் அவர்களின் சிரிப்பு நியாயமானதுதான் .

இந்த டிஜிட்டல் உலகம் என்ற மாய போர்வையில் பாசங்கள்,பந்தங்கள் எல்லாம் கானல் நீராகி இணையங்கள்தான் இதயத்தில் உள்ளது. சரி இந்த கடிதங்கள் என்ன செய்தன , கடிதங்கள் என்ன புரட்சி செய்யும் என கேட்கும் அன்பர்களுக்கு சில தகவல்கள் உலக கடித தினத்தில்.  

தகவல் தொடர்பின் முக்கிய அம்சமான கடிதம் எழுதுதலை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் தேதி உலகக் கடிதம் எழுதும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டிக் கடிதம் எழுதும் போட்டிகள்கூட நடத்தப்படுகின்றன.

கடிதம் எழுதும் கலையை மீட்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவரால் தொடங்கப்பட்டது உலகக் கடிதம் எழுதும் தினம். 90 களின் காலக்கட்டம் வரை தகவல் பரிமாற்றத்தின் முக்கிய அம்சமாக கடிதங்கள் இருந்தன.

காதலின் தூதுவர்கள் கடிதங்கள்

கடிதங்கள் இரு நபர்களுக்கு இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மட்டும் அல்ல எழுத்துக்களின் கோர்வையில் நடக்கும் உறவு பரிமாற்றம். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மின்னல் வேகத்தில் தகவல்களைப் பரிமாற மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்அப் எனப் பல வசதிகள் இருப்பினும், 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் அறிந்த ஒரே தகவல் பரிமாற்ற வழி கடிதம் மட்டும் தான்.

குறிப்பாக கடிதங்களில் டாப் 10 வரிசையில் உள்ளவை காதல் கடிதங்கள் தான் காதலித்துப் பார் உனக்கும் கவிதை வரும் கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் ஆம் அன்றைய காலக்கட்டத்தில் காதலின் தேவதூதன்களாக இருந்தவர்கள் நண்பர்களும் கடிதங்களும் தான்.

காதல் தாங்கும் வரிகளில் தான் எத்தனை பேரழகு. இந்த கடிதங்கள் சொல்வதெல்லாம் பிரியத்தின் உணர்வுகளையும் எல்லாக் காலத்திலும் தனிப்பெருந்துணையாக இருக்கும் காதலைத்தான் அவ்வாறு பிரபலங்கள் சிலர் எழுதிய காதல் கடிதங்கள் உங்களுக்காக :

சேகுவேரா காதல் கடிதங்கள் 

அசாதாரணங்களைப் பற்றி கனவு காண சொன்ன மக்கள் வீரன் சேகுவேரா கியூபாவிலிருந்து பொலிவியாவுக்குக் கிளம்பிய சமயத்தில் அவர் மனைவிக்கு எழுதிய கடிதம்:

1966,நவம்பர் 11 "பிரியமானவளே! உன்னைப் பிரிவது கஷ்டமாக இருக்கிறது.

ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்திற்காக எப்போதும் தியாகங்கள் செய்ய விரும்புகிற மனிதன் என்று என்னை நீ புரிந்து கொள்வாய். தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன்.

மக்களின் துன்பங்களையும், அவர்கள் அனுபவிக்கும் வறுமையையும் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என நம்புகிறேன். உனக்கு அடுத்த கடிதம் எழுத நீண்ட காலம் ஆகலாம்.

காதலர் தின ஸ்பெஷல் : காதல் புரட்சி சரித்திரம் படைத்த கடிதங்கள் | World Letter Writing Day

காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும் எண்ணத்தால் உங்களோடு இருப்பேன். எனது அன்புக்குரிய மனிதர்களை, உன்னை, குழந்தைகளை பிரிய நேர்கிறதே என்று வேதனைப் படுகிறேன். பிறநாடுகளில் கோடிக்கணக்கான மக்களைச் சுரண்டும் எதிரியோடு போரிடப் போகிறேன் என்பது வேதனையை குறைக்கிறது.

உடல்நலத்தை கவனித்துக் கொள். குழந்தைகளை பார்த்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை மனைவியாக பெற்றதையும் என் வாழ்க்கையின் அற்புத விஷயங்களாக கருதுகிறேன்.

இந்தப் போராட்டத்தில் இறக்க நேருமானால் சாகும் தறுவாயில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்." ஒரு மாவீரனின் காதல்!

நெப்போலியன் காதல் கடிதங்கள்

மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் மிகவும் ரசிக்கத்தக்கவன்.தன்னை விட வயதில் மூத்த ஜோசபினைக் காதலித்தான்.

அன்பே! நேற்று போர்களத்தில் கடுமையான வேலை,கொஞ்சம் கூட ஓய் வில்லை.உணவோ,உறக்கமோ இன்றி ஓரு வாரமாக இருந்தும், நான் சுறுசுறுப்பாக வேலை செய்வது கண்டு எங்கள் குழுவினர் அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.

காதலர் தின ஸ்பெஷல் : காதல் புரட்சி சரித்திரம் படைத்த கடிதங்கள் | World Letter Writing Day

அது என்னால் எப்படி சாத்தியப்படு கிறது என்று எல்லோரும் திகைத்த னர். என்ன?…..உனக்கு ஏதாவது புரி கிறதா? நீ எழுதும் கடிதங்கள் என் சட்டைப்பையிலேயே இருப்பது வழக்கம் சோர்வு ஏற்படும்போது நான் உன் கடிதங்களை எடுத்துப் படிப் பேன்.

அவ்வளவுதான் சோர்வு பறந்துவிடு ம் புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும். அப்புறம் பசியாவது தாகமா வது! ஒரு விஷயம் என் துயரங்களைக் கண்டு நீ மனதை அலட்டிக் கொள்ளக்கூடாது.

துன்பம் என் நண்பன் அதை நான் வெறுக்க மாட்டேன். உலகத்தில் அபார சாதனைகளைச் சாதிப்ப தற்காகவே பிறந்த எனக்குத் துன்பந்தான் தூய நண்பன். இன் பம் என் விரோதி.அது என்னைச் சோம்பேறியாக்கி விடும் அதை நான் வெறுக்கின்றேன் இரவில் அதிக நேரம் கண் விழிக்காதே, உடம்பை ஐர்க்கிரதையாக்க கவனித்துக் கொள்.

 மார்க்ஸ் காதல் கடிதம்

1856ம் வருடத்தில் ஜென்னி ஜெர்மனிக்குக் குறுகிய காலப் பயணம் சென்றிருந்தாள். அப்பொழுது ஜென்னிக்கு வயது நாற்பத்திரண்டு, பெரிய குடும்பத்தின் தாயாகவும் இருந்தாள்.

அப்பொழுது மார்க்ஸ் பாசத்துடன் ஜென்னிக்கு எழுதிய கடிதம்

அன்பே , நான் மறுபடியும் உனக்கு எழுதுகிறேன், ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன், என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடிக் கொண்டிருப்பதும் அதை நீ அறிந்து கொள்ள முடியாமல் அல்லது கேட்க முடியாமல் அல்லது எனக்குப் பதிலளிக்க முடியாமலிருப்பதும் என்னை வாட்டுகிறது

காதலர் தின ஸ்பெஷல் : காதல் புரட்சி சரித்திரம் படைத்த கடிதங்கள் | World Letter Writing Day

“ “எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன், நான் உன்னை அன்போடு தொடுகிறேன், தலை முதல் கால் வரை உன்னை முத்தமிடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டுப் பணிகிறேன், ‘அன்பே! உன்னைக் காதலிக்கிறேன்’ என்று முணுமுணுக்கிறேன்.

ஆம், எக்காலத்திலும் காதலித்ததைக் காட்டிலும் அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன் போலியான, உளுத்துப் போன உலகம் எல்லா மனிதர்களையும் போலிகளாக, உளுத்துப் போனவர்களாகப் பார்க்கிறது. என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்குப் பின்னால் என்னைத் திட்டுபவர்களில் எவராவது இரண்டாந்தரமான நாடக அரங்கில் முதல்தரமான காதலன் பாத்திரத்தை நடிப்பதற்காக என்னை எப்பொழுதாவது குறை கூறியதுண்டா? ஆனால் அது உண்மையே.

இந்தப் போக்கிரிகளுக்கு நகைச்சுவை இருக்குமானால் அவர்கள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை ஒரு பக்கத்திலும் உன் காலடியில் நான் கிடப்பதை மறு பக்கத்திலும் ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள்.

இந்தப் படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்துக்குக் கீழே எழுதியிருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிரிகள், முட்டாள்களாகவே நீடிப்பார்கள்.” “அன்பே, நீ சிரிக்கலாம்; நான் திடீரென்று பிரசங்கத்தில் இறங்கிவிட்டது ஏன் என்று கேட்கலாம்.

ஆனால் உன்னுடைய இனிமை நிறைந்த தூய்மையான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். நான் மெளனமாக இருப்பேன், ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன். என் உதடுகளினால் உன்னை முத்தமிட இயலாதபடியால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுவேன், வார்த்தைகளைத்தான் கொட்டுவேன். நான் கவிதை கூட எழுதுவேன் என்பது மெய்யே.

புரட்சி விதைத்த கடிதங்கள்

கடிதங்கள் காதலை மட்டும் புகழ் பாடவில்லை காவியத்தையும் அமைத்துள்ளது. கடிதம் எத்தன்மைதாயினும் இதன் மூலம் எழுத்து, சிந்தனை, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நயம்படக் கருத்துரைக்கும் பாங்கு, நட்பு பாராட்டுவது எனப் பல திறமைகள் வெளிப்படுகின்றது.

இவற்றில் தனி நிலைக் கடிதங்களைக் காட்டிலும் பொது நிலைக் கடிதங்கள் சமூகத்திற்கானதாக இருப்பதால் அவை மக்களின் மனங்களில் ஊடுருவி உணர்வோடும் உதிரத்தோடும் கலந்து விடுகின்றன.

இதற்கு பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் கடிதங்களே சாட்சி. தமிழர்தம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, அரசியல் என அனைத்துத் தளங்களிலும் இழந்த அடையாளங்களை மீட்கப் போராடிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் அறிஞர் அண்ணா. கட்சியினரின் கருத்துகளை அறிவதற்கும், தொண்டர்களுக்குச் சமகால அரசியல் போக்குகளை அறிவிப்பதற்கும், தலைமைக்கும் தொண்டர்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கும் ‘தம்பிக்கு...’ என அவர் எழுதிய கடிதங்கள் அரசியலில் ஓர் புதிய பாதையை வகுத்தன.

காதலர் தின ஸ்பெஷல் : காதல் புரட்சி சரித்திரம் படைத்த கடிதங்கள் | World Letter Writing Day

அண்ணாவைத் தொடர்ந்து திராவிடக் காரர்களை மட்டுமன்றி வெகுஜன மக்களையும் காலந்தோறும் தன் கடிதங்களால் கட்டிப்போட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். ‘உடன் பிறப்பே’ என அழைக்கும் அவரின் கடிதங்கள் முற்போக்குச் சிந்தனைகளை, மூட நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் முழுப்பகுத்தறிவுக் கருத்தாக்கங்களாகத் திகழ்ந்தன.

கலைஞரின் எழுத்துக்கள் சுருக்கமானதாகவும் எளிமையான தெளிந்த கருத்தாழம் மிக்க தன்மை கொண்டதாகவும் இருந்தன. தொண்டர்களுக்கான அறிவுரைகளையும் நாட்டு நடப்பையும் பிற கட்சியினரும் படித்து ரசிக்கும் அளவில் இலக்கிய நயம் குழைத்துத் தந்ததால் கலைஞரின் கடிதங்கள் காலம் கடந்தும் பேசப்படுவது மட்டுமன்றி, தொண்டர்கள் அவரின் கடிதங்களுக்காக ஏங்கும் நிலையையும் உருவாக்கியது.

எந்தப் பிரச்சினையானாலும், கடிதம் எழுதி அதற்குப் பதில் கடிதம் பெறுவதையே பெரும் தீர்வாக எண்ணிக் கடிதங்களை வரைந்தார். மூதறிஞர் ராஜாஜி தனக்கு வரும் கடிதங்களைத் தவறாமல் படித்து அதற்குத் தன் கைப்பட பதில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு சிறையிலிருந்த போது மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதம் மிகவும் புகழ் பெற்றவை.

மகாகவி பாரதி தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் அன்பை வெளிப்படுத்தினாலும் மொழிப் பற்றையும் புரட்சிகர கவிதைகளையும் பறைசாற்றி நிற்கும். யார் மீதாவது கோபம் வந்தால் அவ்வளவுதான், அவருக்குக் கோபமாக கடிதம் எழுதும் பழக்கமுடையவர் ஆபிரகாம் லிங்கன்.

துன்பமான சூழலிலும் மனைவிக்கு அன்பையும் நம்பிக்கையையும் தன் கடிதங்கள் வழியே பகிர்ந்தவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். தமிழறிஞர்கள் மு.வ., உ.வே.சா. போன்றோரின் கடிதங்கள் இலக்கியச் செழுமைக்கும் தொன்மைக்கும் சான்றுகளாக இன்றும் பேசப்படுகின்றன.

கடிதம், வெறும் வார்த்தைகளைத் தாங்கி வரும் காகிதம் அல்ல. எழுதுபவரின் எண்ணங்களைப் படிப்போரின் நெஞ்சில் பதிய வைக்கும் பண்பாட்டுப் பெட்டகம். உணர்வோடும் உறவோடும் கலந்து நிற்கும் காலக் கண்ணாடி.