இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் - மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் - சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால் திடீரென கடல் நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரை சேர்ந்து அங்கே பேரழிவுகளை ஏற்படுத்துவிடும். இவற்றை கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை என்று கூறப்படுகிறது.
கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடற்பகுதியில் அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையை உருவாக்கியது.
அப்போது, 9.1 முதல் 9.3 அளவிற்கு இந்த நிலநடுக்கம் பதிவானதால் சுமார் 14 நாட்களுக்கு மேல் பாதிக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக இறந்து போனார்கள். ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்களை பறிக்கொடுத்ததன் விளைவாக இன்னும் கூட சுனாமி மீதான அச்சம் மக்கள் மத்தியில் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டராக பதிவாகியுள்ளது. கடலில் சுனாமி பேரலைகள் உருவாக்கக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருக்கிறது.
இந்தோனேஷியாவில் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால், அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் பீதி அடைந்து அலறி அடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர்.
இந்தோனேசியாவின் மௌமரேவில் இருந்து 95 கிமீ வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டனவா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
