உலக தலைவர்களை தன்னுடைய பேச்சால் பிரமிக்க வைத்த 14 வயது தமிழ்ச்சிறுமி
OP26 climate summit நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தமிழக சிறுமியின் உரை அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா உமாசங்கர் (14). இவர் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் சூரிய மின்சக்தியை பயன்படுத்தி தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். இதனையடுத்து, இவரது கண்டுபிடிப்பு இளவரசர் வில்லியம் அறக்கட்டளை சார்பில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் COP26 climate summit நிகழ்வில் தூய்மை தொழில்நுட்பம் குறித்து பேச வினிஷாவுக்கு இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்தார்.
மாநாட்டில் வினிஷா பேசியதாவது -
இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செய்யத் தொடங்குங்கள். பழைய விவாதங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவை.
எனவே எங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம்.
எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர்.
மேலும் நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரம் கிடையாது. நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. பூமியை சேர்ந்த பெண்ணும் தான். நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சிறுமியின் பேச்சு அனைவரையும் பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது.
