இடிபாடுகளில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் எலிகள் : புதிய ஆராய்ச்சியில் ஒரு விஞ்ஞானி
அறிவியல் பரிசோதனை முயற்சி ஒன்று முன்னேற்றம் கண்டு, அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. பூகம்பங்களின் போது சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்காக எலிகளுக்குப் பயிற்சி வழங்கடும் திட்டத்தோடு ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
இதில் எலிகளுக்கு சிறிய அளவிலான பைகள் அதன் முதுகில் கட்டப்பட்டு, அதில் மைக்ரோபோன்கள், லொகேஷன் ட்ராக்கர்கள் முதலானவை நிரப்பப்பட்டு, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களிடம் அனுப்பப்படும். ஹீரோ ரேட்ஸ் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த முனைவர் டான்னா கீன் முன்னெடுத்து வருகிறார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தற்போது இந்த எலிகள் துருக்கி நாட்டிற்கு அனுப்பப்படுகின்றன. இதுகுறித்து பேசியுள்ள முனைவர் டான்னா கீன், `எலிகளால் சிறிய அளவிலான இடங்களுக்குள் நுழைந்து போகும் முடியும் என்பதால், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களிடம் அதனை எளிதில் அனுப்ப முடியும்.
இதனை நேரடியாக பூகம்பத்தில் ஆய்வு செய்யவில்லை எனினும், ஆய்வுகூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இடிபாடுகளில் அதன் செயல்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் நாம் இணைக்கும் பைகளின் மூலமாக நாம் இருக்கும் இடத்திற்கும், எலி இருக்கும் இடத்திற்கும் இணைப்பு உருவாகிறது. அதன்மூலமாக நாம் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச முடியும்’ எனக் கூறியுள்ளார்.
துருக்கியில் உள்ள தேடுதல் மீட்புக் குழு ஒன்றுடன் தனது ஆய்வுக்குழு இணைந்துள்ளதாகக் கூறியுள்ள டான்னா கீன், `பிற நிறுவனங்கள் நாய்களுக்குப் பயிற்சி வழங்கும் நிலையில், நாங்கள் மட்டுமே எலிகளை மீட்புப் பணிகளைப் பயன்படுத்துகிறோம்.
இந்த ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிப்பதால், இதன்மூலமாக மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.