அமெரிக்காவில் 2-வது முறையாக வடிவமைக்கப்பட்ட காந்தி சிலை! இந்தியர்கள் மகிழ்ச்சி
அமெரிக்காவின் மிசுசிப்பி மாகாணத்தில் உள்ள கிளார்க்ஸ்டேல் நகரில் மஹாத்மா காந்தியின் வெண்கல சிலை நேற்று அமைக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவில் அமைக்கப்படும் 2-வது காந்தி சிலையாகும். அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசுசிப்பி மாகாணத்தில் கிளார்க்ஸ்டேல் என்ற நகரம் இருக்கிறது.
இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி வுல்லாகன்டி என்பவர், பீப்பிள் ஷோர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். கடந்த 4 ஆண்டுகளாக பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்தது. வேலை இழப்பு போன்ற சிக்கல்களில் இந்த நகரம் சிக்கித்தவித்தன.
இந்திய வம்சாவளியான முரளியின் நிறுவனம் வாயிலாக அங்கு ஏராளமான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக அந்த நகரம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய கலாசார கவுன்சில் சார்பில், மஹாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பி ராம் சுதார் என்பவர் இந்த சிலையை வடிவமைத்திருக்கிறார்.
இந்தச் சிலை திறப்பு விழா, கிளார்க்ஸ்டேல் நகரில் நேற்று நடந்தது. கிளார்க்ஸ்டேல் நகர மேயர் சக் எஸ்பி சிலையை திறந்து வைத்து பேசுகையில், இந்திய கலாசார கவுன்சில் அளித்த இந்த பரிசால் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு, அஹிம்சை, உண்மை, உறுதி, எளிமையின் வாயிலாக இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பெருந்தலைவர் மஹாத்மா காந்தி. மார்டின் லுாதர் கிங் ஜூனியர் உட்பட பல உலக தலைவர்கள் காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றார். அமெரிக்காவின் பல நகரங்களில் ஏற்கனவே மகாத்மா காந்திக்கு சிலை அமைக்கப்பட்டுளளது குறிப்பிடத்தக்கது.
