சற்று நேரத்தில் வெடித்து சிதற இருந்த விமானம் - 132 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பணிப்பெண்
விமானத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, விமானம் வெடித்து சிதறலாம் என்று விமான பணிப் பெண் கூறியதால், விமானத்திலிருந்த பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள அவசர வழியாக இறங்கினார்கள்.
பிரேசிலின் குயாபா நகரில் உள்ள மார்ஷல் ரோண்டன் சர்வதேச விமானநிலையத்திலிருந்து அசுல் பிரேசிலியன் ஏர்லைன்ஸ் (The Azul Brazilian Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சுமார் 132 பேருடன் ஸா பாலோ-விற்கு கடந்த 25ம் தேதி அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்பட்ட சில மணி நிமிடங்களில் திடீரென்று விமானம் நிறுத்தப்பட்டது. உடனடியாக விமானத்திலிருந்த பணிப் பெண், விமானம் வெடிக்கப்போகிறது என்று கூற, விமானத்தில் இருந்து அனைவரும் வெளியேறும் படி கூறி இருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள், விமானத்திலிருந்து அவசரம் அவசரமாக வெளியேறி இருக்கிறார்கள். ஆனால், 9 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணி ஒருவரான வெண்டர்சன் கூறுகையில், திடீரென விமானம் நிறுத்தப்பட்டது. அப்போது விமான பணிப்பெண் சீக்கிரம் எல்லோரும் உடனே வெளியேறுங்கள் என்று கூறினார். அப்போது, நாங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவசர அவசரமாக வெளியேறினோம்.
இதனால், பலர் சிரமத்திற்கு ஆளானார்கள். இது குறித்து மற்றொரு பயணி பேசுகையில், விமானம் வெடிக்கப் போகிறது என்று அப்பெண் கூறியபோது, பயணிகளின் மனநிலை எப்படி இருந்திருக்கும். ஆனால், கடவுள் அருளால் ஒன்றும் ஆகவில்லை. கடவுளுக்கு நன்றி என்றார். இதனையடுத்து, விமானிகள் பலர், மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து விமான நிறுவனம் அறிக்கையில் கூறுகையில், விமானத்தில் இருந்த பயணிகள் அவசர வழி வழியாக வெளியேற்றப்பட்டார்கள். பயணிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் வழங்கி வருகிறோம். இது போன்று சம்பவம் நடைபெற்றதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். விமானத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல் (மின்கசிவு) கோளாறு காரணமாக உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது என்றார்.
