வாழும் கடவுளாக திகழும் மருத்துவர்கள் - பொறுமையின் பொக்கிஷங்கள்! உலக மருத்துவர்கள் தினம் இன்று!
உலக மருத்துவர்கள் தினம் இன்று! ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி உலக மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. கடவுளுக்கு பிறகு மருத்துவரை தான் வணங்குகின்றோம் ஏனென்றால் ஒரு உயிரை காப்பாற்றும் வல்லமை அவர்களுக்கு உண்டு.
ஏன் மருத்துவ தினம்:
1948ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இரண்டாவது முதல் அமைச்சராக பணியாற்றியவர் டாக்டர் பிதான் சந்திர ராய். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகியும் ஆவார். இவரை இன்னும் பாராட்ட முக்கிய காரணம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்துள்ளார்.
இவரை போற்றும் வகையில் இவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளான இன்று உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இவர் ஜூலை மாதம் 1-ம் தேதி 1882 ஆம் ஆண்டு பிறந்து ஜூலை 1-ம் தேதி 1962 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரை போன்ற சிறந்த மருத்துவர்களால் தான் இன்றும் நாட்டில் மருத்துவர்கள் கடவுளாக பார்க்கப்படுகிறார்கள்.
வாழும் கடவுள்:
மருத்துவருடைய பணி அவ்வளவு சாதாரண பணி அல்ல சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செய்யும் குறும்புகளை சகித்துக்கொண்டு பணியாற்றும் தன்னலமற்ற சேவையாகவே மருத்துவ பணி பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சிறியவர்கள் செய்யும் குறும்புகள் எண்ணற்றவை அவர்களை அவர்கள் வழியாகவே சென்று மருத்துவர்கள் விளையாட்டு பொருட்களை காண்பித்து மருத்துவம் பார்த்து அவர்களை குணமடைய செய்கிறார்கள்.
ஊசி மாத்திரைகள் என்றால் பயப்படாத குழந்தைகளே கிடையாது. ஆனால் நம் உடல் நலத்தை பாதுகாக்கவே இந்த ஊசியையும் மாத்திரை கொடுக்கிறார்கள் என்பதை அறியும் போது தான் மருத்துவர்கள் மீது நம்பிக்கை வந்துவிடுகிறது. மேலும் நேரம் காலம் பார்க்காமல் ஓய்வின்றி உழைக்க கூடியவர்கள் மருத்துவர்கள்தான்.
அதிலும் குறிப்பாக இந்த கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தன் உயிரை துச்சமென நினைத்து போராடி வருகிறார்கள். ஏராளமான மருத்துவர்கள் மக்களுக்காக உயிர் பிரிந்தும் உள்ளனர்.
பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் செயல்பட துடிக்கும் மருத்துவர்கள் கடவுளுக்கு இணையானவர்களே ஆவர். நம் குடும்பத்திற்காக அவர்கள் குடும்பத்தை பிரிந்து உழைத்து வருகிறார்கள்.
உலகம் முழுவதும் இந்த மருத்துவ பணி, உன்னதமான பணியாகவே பார்க்கப்படுகிறது. சிறந்த சுகாதார பராமரிப்பை வழங்குவதில் செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் பல கூட்டுமுயற்சி அடங்கி இருந்தாலும் அவர்களை வழிநடத்திச் செல்லும் கேப்டனாக செயல்படுபவர்கள் மருத்துவர்களே.....
தன்னலமற்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி இந்த கொரோனா காலத்தில் 14 நாட்கள் அவருடைய குடும்பங்களைப் பிரித்து நெருக்கடியான சூழ்நிலையில் மருத்துவர்களாக பணியாற்றுகிறார்கள்.
பி.பி.இ. கிட் அணிந்து ஆறு மணி நேரம் மருத்துவம் பார்ப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது குறிப்பாக தன்னுடைய இயற்கை உபாதைகளை கழிக்க கூட நேரமில்லாமல் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் மருத்துவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
அவர்கள் உயிரை பணயம் வைத்து நம் உயிரை காப்பாற்றி வரும் அந்த கடவுள்களுக்கு எத்தனை வாழ்த்துக்கள் கூறினாலும் ஈடாகாது....