உலக கோப்பை வாங்குவதே எனது லட்சியம் : ஹர்திக் பாண்ட்யா
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்து மகுடம் சூடியது.
இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தானை 130 ரன்னில் கட்டுப்படுத்திய குஜராத் அணி அந்த இலக்கை 18.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது.
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா :
உலகின் எந்த அணியாக இருந்தாலும் ஒரு குழுவாக இணைந்து விளையாடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நாங்களே சரியான உதாரணம். புதிய அணியாக வந்த சீசனிலேயே சாம்பியன் கோப்பையை பெற்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மேலும், நாங்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மரபை உருவாக்கி உள்ளோம் , வரப்போகும் அடுத்த தலைமுறையினர் குஜராத் அணியின் ஐ.பி.எல். வெற்றி குறித்து பேசுவார்கள் என்று கூறிய ஹார்த்திக் பாண்டியா என்ன நடந்தாலும் கவலையில்லை.
இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம். இதற்காக என்னால் முடிந்த எல்லாவிதமான பங்களிப்பையும் வழங்கப்போகிறேன். நான் எப்போதுமே இந்திய அணியின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு வீரர்.
இந்தியாவுக்காக பங்கேற்கும் போது எப்போதுமே உற்சாகம் பிறக்கும். தற்போது எனக்கு கிடைத்துள்ள அன்பு, ஆதரவு எல்லாமே இந்திய அணி வீரர் என்ற அடிப்படையில் வந்தவை தான். அதனால் நீண்ட காலமோ, குறுகிய காலமோ இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் என ஹர்திக் பாண்ட்யா கூறினார்