3-வது டோஸ் போட்டால் ஒமைக்ரான் தொற்றை தடுக்க முடியுமா? நிபுணர்களின் பதில்
ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வருகை தடுப்பூசி எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. பல ஆரம்பக் கட்ட ஆய்வுகள் தடுப்பூசி ஏற்படுத்திய நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி ஒமைக்ரான் வைரஸ் பரவல் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒமைக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று ஆரம்பக்கட்ட ஆய்வுகள் கூறியது. இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒமைக்ரான் பரவல் மற்றும் அது தொடர்பான ஆய்வுகள் ஆரம்பநிலையில்தான் இருக்கிறது. எனவே, இதற்குள்ளாக ஒமைக்ரான் தொடர்பாக எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம். அதே நேரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
யாருக்கு ஆபத்து அதிகம்ன்னு தெரியுமா?
மெடிக்கல் எக்கனாமிக்ஸ் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான கட்டுரை அடிப்படையில், ஒமைக்ரான் வைரஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், ஏற்கனவே கொரோனா வந்தவர்களுக்கும் கூட ஏற்படுமாம். ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 13 லட்சம் நபர்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
இதில், அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆற்றலுடன் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் நோய் எதிர்ப்பு அமைப்புகளில் பலவீனங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தனர். இப்படி தொற்று நோய்க்கு எதிரான ஆற்றல் குறைவான எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு கொரோனா தாக்கலாம். அதே நேரத்தில் அவர்களுக்கு மிக மோசமான நிலை, உயிரிழப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒமைக்ரான் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க 3வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடுவது நல்லது. ஆனால், அதனாலும் கூட ஒமைக்ரான் பரவலை முற்றிலும் தடுக்க முடியாது. கொரோனா தடுப்பூசி கொரோனா தீவிரதத்தை குறைக்க உதவுமே தவிர, 100 சதவிகிதம் கொரோனா தொற்று ஏற்படாது என்று உத்தரவாதத்தை அளிக்காது.
எனவே, தடுப்பூசி போடாதவர்கள், போட்டவர்கள் என அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து தப்ப முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.