உலக சிக்கன நாள்: மக்கள் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

MK Stalin World Austerity Day
By Thahir Oct 29, 2021 07:18 AM GMT
Report

உலக சிக்கன நாளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் உலக சிக்கன நாள் செய்தியில், சிக்கனத்தின் முக்கியவத்துவத்தையும்,

சேமிப்பின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 30 ஆம் நாள் "உலக சிக்கன நாளாக'' நாடு முழுவதும் கொண்டாடப்படுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

"அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்" எனும் உலகப் பொதுமறை தந்திட்ட அய்யன் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, பொருளின் அளவு அறிந்து செலவு செய்யாதவன் வாழ்க்கை நன்றாக இருப்பது போல் தோன்றினாலும், பின்னர் இல்லாது அழிந்துவிடும்.

எனவே, சிக்கன நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த "உலக சிக்கன நாள்'' வலியுறுத்துகிறது.

"சிறு துளி பெரு வெள்ளம்'' "சிறுகக் கட்டி பெருக வாழ்'' போன்ற பொருள் பொதிந்த இப்பொன்வரிகள் சேமிப்பின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைகளைக் கருதி சேமிப்பது மிகவும் அவசியம். இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பாகும்.

அஞ்சலகச் சேமிப்பு முதுமைக் காலத்தில் தேவையான பாதுகாப்பினை அளிக்கிறது. எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பாக அமைந்திட ஒவ்வொரு குடும்பமும் சேமித்திடும் பழக்கத்தினைத் திறம்பட வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடு சிறந்த பாதுகாப்பினைத் தருகிறது.

மேலும், சிறுகச் சிறுக சேமிக்கும் இத்தொகை பன்மடங்கு பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் பயன்படுகிறது.

எனவே, இந்த உலக சிக்கன நாளில், தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த, வீட்டிற்கொரு அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கினை அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடங்கி, சேமித்துப் பயன் பல பெற்றிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.