தமிழருக்கு தூக்குத்தண்டனை - 'தயவு செய்து கருணை காட்டுங்கள்' - கதறும் சகோதரி
மலேசிய தமிழர் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு கருணை காட்டி இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்று சகோதரி சர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசியாவிலிருந்து 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்ததற்காக 2009ம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் 33 வயதான நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த புதன்கிழமை அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், தூக்கு தண்டையானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நாகேந்திரனுக்கு அரசாங்கம் 2வது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவரது மூத்த சகோதரி சர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சர்மிளா பேசியதாவது - சிங்கப்பூர் அரசு அவரது உயிரை காப்பாற்றும் என்று நம்புகிறோம். அவர் அறிவுசார் இயலாமை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். கடவுள் அருளால் ஒரு அதிசயம் நடக்கும் என்று நம்புகிறேன்.
என் சகோதரர் அன்பானவர், மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர். நாகேந்திரன் போதைப்பொருள் கடத்தலுக்கு வற்புறுத்தப்பட்டதாக தான் கருதுகிறேன். சமீபத்தில் நாகேந்திரனை சிறையில் சென்று பார்த்தேன். அப்போது, அவர் மன அழுத்தத்தில் இருந்தார்.
அவர் தூக்கிலிடப்படுவார் என்று அவருக்குத் தெரியும், ஆனால் அவர் வீட்டிற்கு வந்து தனது தாயை கவனித்துக் கொள்ள விரும்புவதாக எங்களிடம் கூறினார். மேலும் சிறுவயதில் நாகேந்திரனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை கண்ணீருடன் காட்டிய சர்மிளா, என் தம்பி வீட்டிற்கு வர வேண்டும் என்று கண்ணீர் சிந்தினார். இவ்வாறு அவர் பேசினார்.
