அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் 1 பணக்கார நாடானது சீனா
அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலகின் பணக்கார நாடாக சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
அந்நாட்டின் பொருளாதார மதிப்பு 120 டிரில்லியன் டாலராக தற்போது உயர்ந்திருக்கிறது. உலக பொருளாதாரத்தின் நிகர மதிப்புகள் குறித்து ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வில், உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக 2000 முதல் 2020ம் ஆண்டு வரையிலான தரவுகளை கொண்டு மேற்கொண்ட இந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது -
2000ம் ஆண்டில் 156 டிரில்லியன் டாலராக இருந்த உலகின் பொருளாதார நிகர மதிப்பு 2020ம் ஆண்டில் 514 டிரில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
இதில், 3ல் ஒரு பங்கினை சீனா பெற்றிருக்கிறது. 2000ம் ஆண்டில் சீனாவின் நிகர மதிப்பு 7 டிரில்லியன் டாலராக இருந்திருக்கிறது. இது தற்போது 120 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது சீனா. அமெரிக்கா சுமார் 50 டிரில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளது. உலகளவில் 68 சதவீத சொத்துக்கள் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்து இருக்கிறது. அதேபோல், உள்கட்டமைப்பு சார்ந்த சொத்துக்களின் மதிப்பு 11 சதவீதமாக இருக்கிறது.
இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

