யாரும் கண்டிராத செவ்வாய் கிரகத்தின் புதிய படங்கள் - நாசா வெளியீடு - மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்

world
By Nandhini Nov 12, 2021 09:00 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது குறித்த ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது.

செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த பிப்ரவரி 18ம் தேதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையில் இறங்கியது.

இதற்கு முன்பு நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதியதால், இந்த ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ பகுதியை ஆய்வுக்காக நாசா தேர்ந்தெடுத்திருந்தது. முன்பே, ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பல புகைப்படங்களை நாசா வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் தற்போது, முன்பு எப்போதும் கண்டிராத புதிய படங்களை பெர்சவரன்ஸ் ரோவர் நாசாவிற்கு அனுப்பி இருக்கிறது. அதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தினை முதன் முறையாக படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. அந்தப் படத்தினை நாசா தற்போது வெளியிட்டிருக்கிறது.

நாசாவானது 1970ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக பல விண்கலன்களை அனுப்பிக் கொண்டு வருகிறது. தற்போது அந்த ஆராய்ச்சியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததா இல்லையா என்பதையும், இந்த கிரகம் ஒரு நாள் மனிதர்கள் வாழக்கூடியதாக மாறுமா என்பதையும் ஒரு நாள் இந்த ஆய்வின் மூலம் முடிவுகள் வெளிவரும். 

யாரும் கண்டிராத செவ்வாய் கிரகத்தின் புதிய படங்கள் - நாசா வெளியீடு - மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள் | World