சிங்கப்பூரில் இன்று நிறைவேற்றப்பட இருந்த இந்திய வம்சாவளி நாகேந்திரனின் மரண தண்டனை நிறுத்திவைப்பு
போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாகேந்திரனுக்கு இன்று நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை, கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம். இவர் 2009ம் தேதி சிங்கப்பூருக்கு 'ஹெராயின்' போதை மருந்து கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, நாகேந்திரன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மேல்முறையீடுகளும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் மரண தண்டனையை இன்று (நவ.10) நிறைவேற்றப் போவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதி முயற்சியாக நாகேந்திரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ரவி, சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, நாகேந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மேல்முறையீடு விசாரணை முடியும் வரை, நாகேந்திரன் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், இன்று நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனையிலிருந்து நாகேந்திரன் தப்பித்திருக்கிறார்.
