முன்னாள் மன்னரை கொலை செய்ய திட்டமிட்டது இளவரசர் சல்மான்தான் - வெளியான அதிர்ச்சி தகவல்

world
By Nandhini Oct 26, 2021 04:00 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால் சவுதி அரேபியா அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில், மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை, இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரத்துக்காக கொலை செய்ய திட்டமிட்டதாக அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சவுதி அரேபியாவிலிருந்து தப்பி கனடாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் புலனாய்வு அதிகாரியான அல்ஜாப்ரி என்பவர் அமெரிக்க செய்தி நிறுவனத்தின் நேர்காணலின்போது இதனை தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் பேசியதாவது -

சவுதி இளவரசர் குறித்த பல ரகசியங்கள் என்னிடம் இருக்கின்றன. மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை அதிகாரத்துக்காக கொல்ல இளவரசர் திட்டமிட்டார். இதற்காக ரஷியாவிலிருந்து விஷம் பொருந்திய மோதிரத்தை வாங்கினார்.

இதன் மூலம் கைகுலுக்கி மன்னரை கொல்ல அவர் நினைத்தார். அந்நேரத்தில், இளவரசர் முகமது பின் சல்மான் அரசில் எந்த மூத்த பங்கையும் கொண்டிருக்கவில்லை. எனினும் தனது தந்தையை அரியணையில் ஏற்றுவதற்காக மன்னரை கொல்ல நினைத்தார். இப்போது, என்னை கொல்ல நினைக்கிறார். ஏனென்றால், நான் கூறியுள்ள தகவல்களால் அவர் அச்சமடைந்துள்ளார். நான் நிச்சயம் ஒரு நாள் கொலை செய்யப்படலாம். நான் சாகும்வரை அவர் அமைதி காக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மன்னரை கொலை செய்ய திட்டமிட்டது இளவரசர் சல்மான்தான் - வெளியான அதிர்ச்சி தகவல் | World