33 வருடங்களாக பாம்பு விஷத்தை தன் உடலுக்குள் செலுத்திக்கொள்ளும் வினோத மனிதன்
லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 33 ஆண்டுகளாக பாம்புகளின் விஷத்தை ஊசி மூலம் தனது உடலுக்குள் செலுத்தி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 33 ஆண்டுகளாக 10 நாட்களுக்கு ஒருமுறை இப்படி பாம்பின் விஷத்தை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி கொள்கிறார் லுட்வின். லுட்வின் 1988ம் ஆண்டின் பிற்பகுதியில் பாம்பின் விஷத்தை ஊசி போடத் தொடங்கி இருக்கிறார்.
அது சாத்தியமா என்று பார்க்க 1948 லிருந்து அதைச் செய்து கொண்டிருந்த ஒருவரைச் சந்தித்த பிறகே செயல்படுத்த தொடங்கி இருக்கிறார். தனது பொழுதுபோக்கின் உச்சமாக தனது வீட்டின் ஒரு அறையில் நாகப்பாம்புகள் மற்றும் ராட்டில்ஸ்னேக்ஸ் உட்பட 33 விஷ பாம்புகளை லுட்வின் வைத்திருக்கிறார்.
அமெரிக்காவில் பிறந்த லுட்வின் தனது பள்ளி பருவம் முடிந்ததும் லண்டனுக்கு வேலை தேடி வந்தார். அவருக்கு அங்கு மிருகக்காட்சிசாலைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு விலங்குகளை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அப்போதிலிருந்துதான் அவருக்கு இந்த பாம்பு விஷங்களின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.
இது குறித்து லுட்வின் கூறியதாவது -
பெரிய மருந்து நிறுவனங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவைப் பற்றி பாம்பு கடி விடயங்களில் கவலைப்படுவது கிடையாது. முக்கியமாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் சுமார் 155,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடித்தால் தேவையில்லாமல் இறந்து விடுகிறார்கள். மேலும், அரை மில்லியன் பேர் பாம்பு கடியால் தங்கள் கைகால்களை இழக்கிறார்கள்.
பாம்பு விஷத்தை ஊசி மூலம் செலுத்தும் போது முதல் 15 நிமிடங்களுக்குள் என் உடலில் வீக்கம் ஏற்படும். இது நம்பமுடியாத அளவிற்கு வேதனையான வலியை தரும். பலமுறை இதன் காரணமாக உயிர்போகும் நிலைக்கு சென்றிருக்கிறேன்.
என்னுடைய இந்த பொழுதுபோக்கு மிகவும் ஆபத்தானதுதான். ஊசி போடுவதற்கு என்னிடம் சில வித்தியாசமான நுட்பங்கள் இருக்கிறது. அது உங்கள் நரம்புகளுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
இதை வேறு யாரும் செய்ய நான் ஊக்குவிப்பது கிடையாது. உடல் முழுவதும் துளைகள் மற்றும் வடுக்கள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.