17 ஆண்டுகளாக காட்டில் தனியாக வாழ்ந்து வந்த அபூர்வ மனிதன்
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அடர்ந்த காடுகளுக்குள் 56 வயதான ஒருவர் தனது அம்பாசிடர் காரில் 17 ஆண்டு காலமாக வசித்து வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்தவர் 56 வயதான சந்திரசேகர்.
இவர் தனது அம்பாசிடர் காரில் காட்டில், அடலேல் மற்றும் நெக்கரே கிராமங்களுக்கு இடையே உள்ள ஒரு காட்டுக்குள் 17 வருடங்களாக வாழ்ந்து வருகிறார். காட்டு பாம்புகள் அவரது காரில் அடிக்கடி நுழையுமாம். விலங்குகளின் அச்சுறுத்தலும் அவருக்கு இருக்குமாம்.
ஆனாலும் சந்திரசேகருக்கு காட்டிற்குள் இருந்து நகருக்குள் திரும்பி வர விருப்பம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இது குறித்து அவர் கூறியதாவது -
"காட்டு விலங்குகளை விட மனிதர்களுக்கு தான் விஷம் அதிகம், அவர்கள் தான் ஆபத்தானவர்கள். நான் 2003 வரை நெக்ரல் கெம்ராஜே கிராமத்தில் மற்றவர்களை போல் சாதாரணமாகத்தான் வாழ்ந்து வந்தேன். 1.5 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வந்தேன்.
எனக்கு, நெல்லூர் கெம்ராஜே கூட்டுறவு சங்கத்திலிருந்து குறுகிய கால கடன் மற்றும் இரண்டு பயிர்க்கடன்களை வாங்கினேன். அது என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. சுற்றியுள்ள மக்களால் நான் தவறாக வழிநடத்தப்பட்டேன்.
ஏமாற்றப்பட்டேன். கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் என்னுடைய வாழ்வாதாரத்தை இழந்தேன். என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டன. நான் மிகவும் மனம் உடைந்து போனேன்.
என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்றேன். ஆனால், அங்கு கருத்து வேறுபாடுகளால் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. அதனால், மன உடைந்த நான் ஒரு நாள் நாகரிக உலகத்திலிருந்து விலகி இருக்க முடிவு செய்தேன். தனது காரில் காட்டுக்குள் சென்று காட்டில் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கினேன். கொரோனா பரவல் சமயத்தில், கிராமங்கள் மூடப்பட்டன.
ஆனால் நான் காட்டுப்பகுதியில் கிடைத்த காட்டு பழங்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன். காடுகளில் காய்ந்த கொடிகளால் கூடை செய்வேன். அதை விற்க நான் தனது சைக்கிளில் கிராமங்களுக்குச் செல்வேன்.
ஒரு நாள் என்னுடைய விவசாய நிலத்தை திரும்பப் பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் ஒரு சிறிய புதரை கூட வெட்டவில்லை, என்னைச் சுற்றியுள்ள எதையும் நான் தொடாமல் அப்படியே வைத்திருக்கிறேன். காட்டில் என் இடத்திற்கு அருகில் ஓடும் நதியில் நான் குளிக்கிறேன்.
எனக்கான உணவை நானே சமைக்கிறேன். ஆகாசவாணியில் ஹிந்தி பாடல்களைக் கேட்கிறேன் என்றார் சந்திரசேகர். தனது விவசாய நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காரில் அப்படியே வைத்திருக்கிறார் சந்திரசேகர்.
காட்டில் அவரது தனிமையான வாழ்க்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது. இந்நிலையில், அப்போதைய மாவட்ட ஆணையர் ஏ.பி. இப்ராஹிம் சில வருடங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்துப் பேசினார்.
மாவட்ட நிர்வாகம் அவருக்கு வீடு கட்டிக் கொடுத்தது. இருப்பினும், அந்த வீடு ஒரு ரப்பர் காட்டுக்குள் கட்டப்பட்டதால், அது அவரது மனதிற்கு பிடிக்கவில்லை. இரவுகளில் யானைகள், சிறுத்தை, காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டெருமைகள் உட்பட பெரும்பாலான காட்டு விலங்குகள் அவரது இருப்பிடத்திற்கு வருமாம். வனத்துறையின் அதிகாரிகளும் அவரை காட்டில் தனது வாழ்க்கையை நடத்த அனுமதித்துவிட்டனர்.
