மகளை சந்திக்க முடியாமல் கனடாவில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பெண் தாய்!
தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையை தன் தந்தையின் கையில் கொடுத்துவிட்டு, குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுப்பதற்காக கணவனுடன் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு சென்றார் ரோஷிணி கிறிஸ்டியன். ஒரு பக்கம் பிரித்தானியாவுக்கு செல்கிறோம் என்ற மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் ரோஷிணிக்கு இருந்தாலும், குழந்தையை பிரிந்து கனத்த மனதுடன் சென்றார் ரோஷிணி.
ரோஷிணிக்கு விமானத்தில் பறக்கும்போது, பிரித்தானியாவுக்கு செல்கிறோம் என்ற எண்ணம் மறைந்து, ஒன்றரை வயதான பெண் குழந்தையை பிரிந்து செல்கிறோம் என்ற குற்ற உணர்வே அவளுக்கு ஆழமாக இருந்தது. பிரித்தானிய வாழ்க்கை ரோஷிணிக்கு எதிர்பார்த்தது போல் அமையவில்லை.
கணவனுக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு விவாகரத்தானது. மகளின் முகத்தை மட்டுமே கண் முன் நிறுத்தி வாழ்ந்த ரோஷிணி மீண்டும் அவளை சந்திக்கும்போது அவளுக்கு ஆறு வயது.
இதனையடுத்து, கனடாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தார் ரோஷிணி. மாணவர் விசாவில் கனடாவுக்கு வந்து, படித்து, வேலைக்கு சேர்ந்தாலும், மனதில் ஒரே ஆசைதான். அது, எப்படியாவது மீண்டும் மகளுடன் இணைந்து விட வேண்டும் என்பதுதான்.
ஆனால், ரோஷிணியின் நிரந்தர வாழிட உரிமத்துக்கான விண்ணப்பம் நகரவே இல்லை. கொரோனாவோ, கூடுதல் தாமதத்தை ஏற்படுத்த, இன்னமும் மகளுடன் இணைய முடியாமல் வாடிப்போயிருக்கிறார் ரோஹிணி.
தற்போது, ரோஹிணியின் மகள் ட்விஷாவுக்கு 12 வயதாகிறது. ஆனாலும், இன்னமும் அவர் கண்ட கனவு, மகளுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற கனவு பலிக்கவே இல்லை. மகளின் முகத்தையும் புன்னகையையும் நினைத்துக்கொண்டே, மகளுடன் சேரும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ரோஷிணி.
