நடுங்க வைக்கும் சம்பவம் - பொதுமக்கள் மீது மர்ம நபர் கத்தியால் குத்தி வெறிச்செயல் - 3 பேர் பலி!
ஜெர்மனியில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் வுர்ஸ்பர்க் என்ற நகரின் பார்பரோசாப்லாட்ஸில் முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் கையில் ஒரு பெரிய நீள கத்தியுடன், அங்கிருந்த மக்களை திடீரென கத்தியால் குத்தி தாக்குகிறார்.
இத்தாக்குதலில் ஒரு சிலர் அவரிடமிருந்து தப்பித்து தெறித்து ஓடுகிறார்கள். அதில் சிலர் பேர் மட்டும் அவரிடமிருந்து அந்த கத்தியை பிடுங்க முயற்சி செய்தனர். உடனே அங்கிருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை பிடிக்க முயற்சி செய்தனர்.
அந்த நபர் போலீசாரையும் தாக்க முயற்சி செய்தான். அப்போது, போலீசார் துப்பாக்கியால் அவன் காலில் சுட்டுப் பிடித்தனர். அந்த நபர் யார் என்பதும், எதற்காக இந்த கொடூர செயலை செய்தான் என்பது குறித்து போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பொலிசார் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்புமும் நிலவியது.


