சீனாவில் புதிய வகை பறவை காய்ச்சல்? – அச்சத்தில் மக்கள்!
முதன்முதலாக கொரோனா வைரஸ் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சீனாவின் மத்திய நகரமான வுஹானைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து வூஹான் நகரிலுள்ள வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்துதான் தொற்று பரவியிருக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சந்தேகத்தைக் கிளப்பின.
விஞ்ஞான வளர்ச்சியின் உதவியோடு மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த உலகையும், அதன் மக்களையும் வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டுவிட்டது கொரோனா வைரஸ். உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசியை பேராயுதமாகக் கொண்டு கொரோனாவை எதிர்த்துப் போராடி வருகின்றன. இந்தப் பெருந்தொற்று உலக மக்களை வாட்டி எடுக்க ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன.
கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் இறந்து கொண்டு வருகிறார்கள். கொரோனாவின் பிடியில் மக்கள் சிக்கித் தத்தளித்து வருகின்றனர். உலக நாடுகளில் கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசிகள் மக்களுக்குப் போடப்பட்டு வருகின்றன.
இன்னும் கொரோனா வைரஸ் குறைந்தபாடில்லை. முதல் அலை முடிந்து, தற்போது 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் 41 வயதான நபர் ஒருவருக்கு H10N3 வகை பறவை காய்ச்சலால் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை பறவை காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுவது இதுவே முதல்முறை. இந்த நபருக்கு கடந்த ஏப்ரல் 28ம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவருக்கு கடந்த மே 28ம் தேதி பறவை காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பறவைக் காய்ச்சல் எப்படி இவருக்கு ஏற்பட்டது என்பது குறித்த விவரங்களை சீனா அரசு இன்னும் வெளியிடவில்லை. தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை H10N3 பறவை காய்ச்சல் மனிதர்கள் யாருக்கும் உறுதியாகவில்லை. இதுவே முதல் முறையாகும். இந்த H10N3 பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு இடையே வேகமாகப் பரவாது.
மற்றவையுடன் ஒப்பிடுகையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது. இருப்பினும் இந்த வகை பறவை காய்ச்சல் சீனாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.